இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்தார் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தமிழர் விவகாரம், இந்திய பாதுகாப்புக் கரிசனை பேசவில்லையாம்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக அண்மையில் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்ட சந்தோஷ் ஜாவுக்கும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் இடையிலான சந்திப்பு வியாழக்கிழமை வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது.

புதிய உயர்ஸ்தானிகராகப் பதவியேற்றுக்கொண்டதன் பின்னர் வழமையாக நடைபெறுகின்ற மரியாதை நிமித்தமான சந்திப்பாகவே இது அமைந்ததாகவும், தமிழர் விவகாரம் மற்றும் இந்தியாவின் பாதுகாப்புக்கரிசனைகள் போன்ற ஆழமான விடயங்கள் பற்றி இதன்போது கலந்துரையாடப்படவில்லை எனவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

அதேவேளை இருநாடுகளுக்கு இடையிலும் நீண்டகாலமாக நிலவிவரும் மிக ஆழமான தொடர்புகள் குறித்து இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதுடன், அதனை மேலும் வலுப்படுத்திக்கொள்வதற்கான வழிமுறைகள் பற்றி ஆராயப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேபோன்று இலங்கை – இந்தியா இணைந்து பல்வேறு துறைகள் சார்ந்து முன்னெடுத்துவரும் திட்டங்கள் பற்றியும், அவற்றைப் பலப்படுத்துவது குறித்தும் தாம் இருவரும் கலந்துரையாடியதாகவும் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.