காணாமல்போனோரின் தாய்மாரை கைதுசெய்வதால் தமிழ் சமூகத்தின் நம்பிக்கையை வெல்லமுடியாதாம்! அரசைக்; கண்டிக்கிறார் அம்பிகா சற்குணநாதன்

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் போராட்டத்தைத் தடுப்பதன் மூலம் யுத்தத்துடன் தொடர்புடைய பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குவதில் அரசாங்கம் கொண்டிருக்கும் அரசியல் ரீதியான தன்முனைப்பைக் காண்பிக்கமுடியாது எனவும், தமிழ் சமூகத்தின் நம்பிக்கையை வென்றெடுக்கமுடியாது எனவும் சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டோருக்கான ஐக்கிய நாடுகள் நிதியத்தின் உறுப்பினர் அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வவுனியா விஜயத்துக்கு எதிராக வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் வவுனியா மாவட்ட தலைவி சிவநாதன் ஜெனீற்றாவும், மேலும் சிலரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர். அதன்போது அவர்கள் பொலிஸாரால் பலவந்தமாக வண்டியில் ஏற்றப்படுவதைக் காண்பிக்கும் காணொளிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பல்வேறு விமர்சனங்களைத் தோற்றுவித்திருக்கின்றன.

குறிப்பாக இதுபற்றிக் கருத்து வெளியிட்டிருக்கும் சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டோருக்கான ஐக்கிய நாடுகள் நிதியத்தின் உறுப்பினரும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளருமான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன், உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடும் அரசாங்கம், மறுபுறம் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் தாய்மார் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தடுத்து, அவர்களைக் கைதுசெய்கிறது எனச் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

அதுமாத்திரமன்றி, யுத்தத்துடன் தொடர்புடைய பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குவதில் அரசாங்கம் கொண்டிருக்கும் அரசியல் ரீதியான தன்முனைப்பைக் காண்பிப்பதற்கும், தமிழ் சமூகத்தின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்கும் இது வழியல்ல எனவும் அவர் தெரிவித்திருக்கின்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.