அகிலத்திருநாயகியை நேரில் சந்தித்து ஜனாதிபதி பாராட்டு
பிலிப்பைன்ஸில் நடைபெற்ற 22 ஆவது ‘மூத்தோருக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப்’ போட்டியில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்ற அகிலத் திருநாயகியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நேரில் அழைத்து பாராட்டி கௌரவித்து மதிப்பளித்தார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது, வயது என்பது வெறும் இலக்கம் மட்டுமே என்பதை நிரூபித்து அகிலத்தை வென்ற அகிலத்திருநாயகிக்கு ஜனாதிபதி வாழ்த்துகளைத் தெரிவித்துகொண்டார்.
அத்துடன், வடக்கு மாகாணத்தில் விளையாட்டுத்துறை மேம்பாட்டுக்காக முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டங்களுக்கு ஆதரவையும், ஆலோசனைகளையும் வழங்குமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.
இவருக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறும் ஆளுநருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற சிரேஷ்ட பிரஜைகளுக்கான தடகளப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்றிருந்த திருமதி அகிலத்திருநாயகி (வயது 71) இரண்டு தங்கப் பதக்கங்கள் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
முல்லைத்தீவு, முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த இவர், 1,500 மற்றும் 5000 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளார். 800 மீற்றர் ஓட்டப்போட்டியில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.
அப்போட்டிக்கு முன்னர் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய 22 ஆவது ஆசிய சிரேஷ்ட பிரஜைகளுக்கான போட்டியில் பங்கேற்ற இவர், அதில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்றார்.
இவர் ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரியாவார் என்பது குறிப்பிடத்தக்கது
கருத்துக்களேதுமில்லை