மொழியறிவு, சட்டப்புலமை மாத்திரம் தமிழ் மக்களுக்குத் தீர்வைத் தரா! சிறிதரன் எம்.பி. இப்படிக் கூறுகிறார்

மொழி அறிவு, சட்டப்புலமை மாத்திரம் தமிழ் மக்களுக்குத் தீர்வைத் தராது. மன ஒற்றுமையும் ஆற்றலும் தமிழ் மக்கள் மீதான தேசிய உணர்வும் தேசிய விடுதலைக்கான வளி வரைபடத்தையும் சரியாக எவர் கொண்டு செல்கின்றாரோ, அவரே இந்த பாதையை கொண்டு செல்வார் என இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருக்கான தேர்தல் இம்மாதம் நடைபெறவுள்ளது. அப்பதவிக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகிய மூவரும் போட்டியிடுகின்றர்.

இந்நிலையில் சனிக்கிழமை மட்டக்களப்புக்கு விஜயம் செய்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், அக்கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களைச் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்திய பின்னர் மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே  இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

ஆங்கிலம், மொழி, சட்டம் என்பன ஒருவருடைய ஆற்றலும் திறமையுமாகும். இதனை யாரும் இகழ்ந்து பார்க்கத் தேவையில்லை. ஆனால் ஆங்கிலம், மொழி, சட்டம் போன்றவை என்றால் எமக்கு சேர் பொன்.இராமநாதன், தந்தை செல்வா, ஜி.ஜி.பொன்னம்பலம், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், போன்றோரின் காலத்தில் நாங்கள் விடுதலை பெற்றிருக்க வேண்டும். மொழி அறிவு, சட்டப்புலமை மாத்திரம் தமிழ் மக்களுக்குத் தீர்வைத் தரா. மன ஒற்றுமையும், ஆற்றலும், தமிழ் மக்கள் மீதான தேசிய உணர்வும், தேசிய விடுதலைக்கான வளி வரைபடத்தையும் சரியாக எவர் கொண்டு செல்கின்றாரோ, அவரை இந்தப் பாதையை கொண்டு செல்வார்.

மொழியியல் ஒருவருக்கான கொடை, சட்டம் என்பது கல்வி ரீதியாக கிடைக்கின்ற ஆற்றல். ஆனால் மக்களை வழிநடத்துவதற்கு தைரியமும், இனம் ரீதியான சிந்தனையும் இருந்தால் அது ஒரு தலைமைத்துவமாக அமையும்.

எனவே தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் சந்தித்த எமது கட்சியின் பொதுசபை உறுப்பினர்களிடையே  நான் இக்கட்சியின் தலைவராக வரவேண்டும் என்ற என்ணத்தைக் கொண்டிருக்கின்றார்கள். அதற்குரிய பெரும்பாலான ஆதரவையும், சம்மதத்தையும் எனக்குத் தெரிவித்திருக்கின்றார்கள். அவர்களின் பலத்தோடும், ஒற்றுமையோடும், நடைபெற இருக்கின்ற எமது உட்கட்சித் தேர்தலிலே நான் வெற்றிபெற்று கட்சியின் பொறுப்பை ஏற்று வழிநடத்திச் செல்வதற்கு நான் தாயாராக இருக்கின்றேன் என அவர் தெரிவித்தார்.

இச்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் பொதுச் சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.