போதைப்பொருள் விசேட சுற்றிவளைப்புகளில் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவும் இணைவு! பிரதி பொலிஸ்மா அதிபர் இந்திக ஹப்புகொட தெரிவிப்பு

போதைப்பொருள் தொடர்பில் தற்போது நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் விசேட சுற்றிவளைப்புக்களில் பொலிஸ் போக்குவரத்து பிரிவும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய நாடளாவிய ரீதியில் பல இடங்களிலும் சோதனைச் சாவடிகளை அமைத்து, வாகனங்களைச் சோதிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து நிர்வாகம் மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் இந்திக ஹப்புகொட தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் –

விசேட அதிரடிப்படையினர், மோப்ப நாய் பிரிவு, அதிவேக வீதி போக்குவரத்து பிரிவு, கொழும்பு போக்குவரத்து தலைமையகம் உள்ளிடவை இந்த நடவடிக்கைகளில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன. அரச, தனியார் பஸ்கள் உட்பட சகல வாகனங்களும் சோதனைக்குட்படுத்தப்படவுள்ளன.

குறிப்பாகக் கொழும்பிலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு கொண்டு செல்லப்படும் போதைப்பொருள்களைக் கைப்பற்றுவதே இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.

சோதனைக்குட்படுத்தப்படும் வாகனங்களுக்கு விசேட ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும். ஏனைய சோதனைச் சாவடிகளிலுள்ள பொலிஸார் இலகுவில் இனங்காண்பதற்காக இந்த ஸ்டிக்கர்கள் ஒட்டப்படவுள்ளன.

எவ்வாறிருப்பினும் கொழும்பில் சோதனைக்குட்படுத்தப்பட்ட ஆனால் சந்தேகத்துக்கிடமான வாகனங்கள் காணப்பட்டால் அவற்றை மீண்டும் சோதனைக்குட்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒட்டப்படும் ஸ்டிக்கர்களில் பொலிஸ் பிரிவுகள் மற்றும் தினம் என்பன குறிப்பிடப்படும். எனவே, வேறொரு பொலிஸ் பிரிவுக்குள் ஏற்கனவே சோதனைக்குட்படுத்தப்பட்ட வாகனம் பயணித்தால், அவை மீண்டும் சோதனைக்குட்படுத்தப்படும். – என்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.