ஹவுதிகளை அடக்க கடற்படைக் கப்பலை எவ்வாறு ஜனாதிபதி ரணில் அனுப்ப முடியும்! ஹக்கீம் கேள்வி

எமது நாடு அணிசேரா நாட்டுக்கொள்கையைப் பின்பற்றுவதாக இருந்தால் ஹவுதி கிளர்ச்சியாளர்களை அடக்குவதற்கு  ஜனாதிபதி எவ்வாறு எமது கடற்படை கப்பலை அனுப்ப முடியும் என கேட்கிறோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் –

சபாநாயகருடன் நாங்கள் கடந்த வாரம் உகண்டா நாட்டுக்கு சென்றிருந்தோம். அதேபோன்று எதிர்வரும் 18ஆம் திகதி உகண்டாவில் அணிசேரா நாடுகளின் தலைவர்களின் மாநாடு இடம்பெற இருக்கிறது. அந்த மாநாட்டுக்கு ஜனாதியும் செல்ல இருக்கிறார்.

எமது நாட்டின் அணிசேரா நாடுகளின் கொள்கை என்ன? எனக் கேட்கிறோம். அமெரிக்க விசுவாசமா எமது அணிசேரா கொள்கை? அமெரிக்காவின், இஸ்ரேலின் தேவைக்கு மேலும் சில நாடுகளுடன் இணைந்து ஹவுதி கிளர்ச்சியாளர்களை அடக்குவதற்கு எமது கடற்படையை அனுப்புவதாக இருந்தால், ஜனாதிபதி எதற்காக அணிசேரா நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள உகண்டாவுக்கு செல்ல வேண்டும்.

அதனால் எமது நாடு அணிசேரா கொள்கையைப் பின்பற்றும் நிலையில் அமெரிக்காவுக்கு விசுவாசமாக இருந்து, ஹவுதிகளை அடக்குவதற்கு அமெரிக்காவின் தேவைக்காக செயற்பட்டு, கிண்டல் செய்ய வேண்டாம். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.