நாட்டின் வங்குரோத்துக்கு காரணமானவர்களுக்கு இதுவரைக்கும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? சஜித் போட்டுத் தாக்கு

நாட்டை வங்குரோத்தாகுவதற்கு காரணமானவர்கள் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து 2 மாதங்கள் கடந்தும் அவர்களுக்கு எதிராக ஜனாதிபதியோ அரசாங்கமோ எந்த நடவடிக்கையும் எடுக்கத் தவறி இருக்கிறது. அதனால் அவர்களுக்கு எதிராக எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன எனக் கேட்கிறோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27 2 இன் கீழ் கேள்வி எழுப்பி உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் –

நாட்டை பாரிய பொருளாதார வீழ்ச்சிக்குக் கொண்டு சென்றவர்கள் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பஸில் ராஜபக்ஷ, அஜித் நிவார்ட் கப்ரால், எஸ்.ஆர்.ஆர்டிகல, டபிள்யூ.டி.லக்ஷ்மன், பி.பி. ஜயசுந்தர மற்றும் சமந்த குமாரசிங்க ஆகியோரைப் பெயர் குறிப்பிட்டு உயர் நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கி இருந்தது. இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டு 2 மாதங்கள் கடந்துள்ள போதிலும், இந்தப் பொருளாதாரக் கொலையாளிகளுக்கு எதிராக ஜனாதிபதியோ  அரசாங்கமோ எந்த வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை .

ஆனால் உயர் நீதிமன்ற தீர்ப்பு தொடர்பில் அரசாங்கம் கையாளப்போகும் விதம் தொடர்பாக  எதிர்க்கட்சி போன்றே 220 லட்சம் மக்களும் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இவர்களுக்கு எதிராக விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்து,விசாரணைகளை மேற்கொண்டு,தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜனாதிபதியும் தற்போதைய அரசாங்கமும் ஏன் உத்தேசிக்கவில்லை எனக் கேட்கிறோம். நாட்டை வங்குரோத்தடையச் செய்ததன் மூலம் குறித்த நபர்கள் தனிப்பட்ட நலன்களைப்  பெற்றுள்ளார்களா என்பது பிரச்சினைக்குரிய விடயம். அதனால் இது தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்குப் பின்னர் அவர்களது குடியுரிமை தொடர்ந்து இருக்க வேண்டுமா?

56 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு வங்கிகளில் வைப்பிலிடப்பட்டு நாட்டுக்கு நஷ்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தற்போதைய நீதி அமைச்சர் கூடத் தெரிவித்துள்ளார். இந்தப் பணத்தை மீளப் பெற்றுக்கொள்ள முடியுமென்றால் வற்வரியை அதிகரிக்க வேண்டிய ஏற்பட்டிருக்காது.

அத்துடன் நனோ உர மோசடியாலும் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் மூலம் பொருளாதாரத்திற்கு சேதம் ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் என்ன? சேதன உர மோசடி காரணமாக நாட்டுக்கு 711.8 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. அனுபவமற்ற இந்நிறுவனம் கொள்முதல் வழிகாட்டுதல்களை விதிமுறைகளைக் கூட மீறியுள்ளது.

விநியோகஸ்தருக்கு 711 மில்லியன் ரூபாவை அவ்வேளையிலேயே பணமாகச் செலுத்தப்பட்டுள்ளது, அமைச்சரவையின் அங்கீகாரத்திற்கு முன்னரோ அல்லது அங்கீகாரம் கிடைத்த அன்றோ உரங்களை விமானத்தில் ஏற்றிக்கொண்டு வரப்படுவது வழக்கத்திற்கு மாறான அதிசயமானதொரு விடயம். உரத் தொகையைப் பகுதி பகுதியாக இறக்குமதி செய்ய ஒப்புக்கொண்டு இருந்தும், மொத்த பங்குகளின் மதிப்புக்காக ஒரு கடன் பத்திரத்தைத் திறந்ததன் காரணமாக 99 லட்சம் தேவையற்ற செலவுகளை அரசாங்கம் சுமக்க நேரிட்டுள்ளது.

அத்துடன் எரிவாயு மோசடியால் ஏற்பட்ட இழப்பு இதைவிடவும் அதிகமாகும். சியாம் கேஸ் டிரேடிங் பிரைவேட் லிமிடெட் குறைந்த விலையில் எரிவாயுவை வழங்க ஒப்புக்கொண்டாலும்,குறிப்பிட்ட நிறுவனத்தின் கோரிக்கையை அனுமதிக்காமல்,அதே நிபந்தனைகளின் கீழ் ஒகியு டிரேடிங் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து அதிக விலைக்கு கொள்வனவு செய்ததால், 1138 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது.

அத்துடன் நாடு வங்குரோத்தாகக் காரணமானவர்கள் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தவர்களில் சிலர் இன்னும் அரசாங்கத்தில் இருக்கின்றனர். ஏன் அவர்களை அரசாங்கத்தில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டதன் ஊடாக,முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட அதிகாரிகள் சிலருக்கு நட்டஈடு செலுத்த நேரிட்டிருக்கிறது.

இதன் பிரகாரம், நாட்டை வங்குரோத்தாக்கியவர்கள் யார் என்பதை வெளிக்கொணர்ந்த தீர்ப்பின் மூலம் நாட்டின் 220 லட்சம் மக்கள் இழப்பீடு கோரி வழக்குத் தொடரலாம். அதனால் இவர்களுக்கு எதிராக இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அதற்கான காரணம் என்ன என்பதை அரசாங்கம் தெரிவிக்க வேண்டும். – என்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.