225 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சமிந்த விஜேசிறி காட்டிக் கொடுத்தார்! சாடுகின்றார் மஹிந்தானந்த

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுக் கொடுக்க 900 லட்சத்தை பெற்றுக்கொண்டு ஆஸ்திரேலியாவில் குடும்பத்துடன் வசிப்பதற்கு சமிந்த  விஜேசிறி 225 உறுப்பினர்களையும் காட்டிக் கொடுத்துள்ளார்.

இவரின் கருத்துக்களால் மக்கள் பிரதிநிதிகள் மலினப்படுத்தப்பட்டுள்ளார்கள். ஆகவே விசேட கவனம் செலுத்துங்கள் என  நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –

தனது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப முடியவில்லை, வீதியில் செல்ல முடியவில்லை என்று குறிப்பிட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி புதன்;கிழமை நாடாளுமன்ற உறுப்புரிமையை இராஜிநாமா செய்தார்.

எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள் வீதியில் செல்கிறோம்,  மக்களைச் சந்திக்கிறோம். இவர் குறிப்பிட்ட விடயங்களை மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவர் குறிப்பிட்ட கருத்துக்கள் ஒட்டுமொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மலினப்படுத்தும் வகையில் உள்ளது.

வெற்றிடமாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளவர் இரட்டை குடியுரிமையைக் கொண்டுள்ளார். 900 லட்சம் ரூபா பெற்றுக்கொண்டு இவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுக் கொடுத்துள்ளார்.

இரட்டை குடியுரிமை உடையவர் நாடாளுமன்றத்துக்கு வருவதற்கும்,ஆஸ்திரேலியாவில் குடும்பத்துடன் வாழ்வதற்கும் இவர் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் காட்டிக் கொடுத்துள்ளார். இவர் குறிப்பிட்ட கருத்துக்கள் பாரதூரமானவை. ஆகவே விசேட கவனம் செலுத்துங்கள். – என்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.