உண்மை நல்லிணக்க இடைக்கால செயலகம் கிழக்கில் கருத்துக்களைக் கேட்டறிந்துள்ளது

உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான இடைக்கால செயலகம் அண்மையில் கிழக்கு மாகாணத்தில் பொது மக்களின் கருத்தறியும் செயற்பாட்டை வெற்றிகரமாக முன்னெடுத்தது.

தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான நிலையான கட்டமைப்பை உருவாக்குவதற்கான தெளிவு மற்றும் பரிந்துரைகளைச் சேகரிக்கும் நோக்கத்துடன் இந்த கருத்தறிதல் நடத்தப்படுகிறது.

கிழக்கு மாகாண நிகழ்ச்சியின் முதல் கட்டம் திருகோணமலையில் நடைபெற்றதோடு திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நொயெல் இமானுவெல் ஆண்டகை, கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாக பிரதானி  பேராசிரியர் வதினி தேவதாசன் உட்பட சிரேஷ்ட விரிவுரையாளர்கள்,  திருகோணமலை மாவட்டச் செயலாளர் சமிந்த ஹெட்டியாராச்சி, கலாநிதி இராமநாத் ஸ்ரீஞானேஸ்வரன்  மற்றும் மாகாண  சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மூதூர் சந்தோசபுரத்தில் உள்ள ஆதிவாசி மக்கள் உட்பட பல முக்கிய  தரப்பினர்களிடமிருந்து கருத்துக்கள் பெறப்பட்டன.

இதனையடுத்து, உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான இடைக்கால செயலக உறுப்பினர்கள் மட்டக்களப்பில் கருத்தறியும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியதுடன், மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஜே. ஜே.   முரளிதரன், கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி பிரபாகரன் உள்ளிட்ட பீடாதிபதிகள் கல்விசார் மற்றும் நிறைவேற்று அதிகாரிகள் ,   மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக தலைவர்  எஸ்.மாமாங்கராஜா, காத்தான்குடி பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் செயலாளர் ஏ.எல்.எம்.சபீல் உள்ளிட்ட உறுப்பினர்களுடன்  கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

அத்துடன், உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான இடைக்கால செயலக குழுவினர், கல்முனை பிரதேசத்திற்குச் சென்று கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் டீ.ஜே. அதிசயராஜா மற்றும்   பல சிவில் சமூக அமைப்புக்களின் உறுப்பினர்கள்,தென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் ஏ . றமீஸ்  உள்ளிட்ட நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் பிரதேச சிவில் சமூக அமைப்புகள் பலவற்றின் உறுப்பினர்கள் உள்ளிட்ட தரப்பினருடன் கலந்துரையாடல்  மேற்கொண்டனர்.

உண்மை மற்றும் நல்லிணக்கம் தொடர்பான இடைக்கால செயலகத்தின் கிழக்கு மாகாண வேலைத்திட்டம், அம்பாறை பொத்துவில் முகுது மகா விகாரையில் விகாரை  விகாராதிபதி  வண. வரகாபொல இந்திரசிறி தேரருடனான  கலந்துரையாடலின் பின்னர் நிறைவுற்றது.

உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான சுயாதீன ஆணைக்குழுவை நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் நிறுவுவதற்கு அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள், உத்தேச ஆணைக்குழுவிற்கான அடித்தளத்தை அமைப்பதில் உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான இடைக்கால செயலகத்தின் பங்கு, 2024 ஜனவரி 2 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள உத்தேச சட்டம் மற்றும் உத்தேச பொறிமுறையின் முக்கிய அம்சங்கள்  உள்ளிட்ட குறித்த பங்குதாரர்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் கருத்துக்கள்  என்பன இந்த கலந்துரையாடல்களின் போது பெறப்பட்டன.

1983 முதல்  2009 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட மோதல்களால் பாதிக்கப்பட்டவர்களின் குறைகளைத் தீர்ப்பதற்கான உத்தேச சட்டமூலத்தின் நோக்கம் தொடர்பில், உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான இடைக்கால செயலகத்தின் குழு தெளிவுபடுத்தியது. இந்த சட்டமூலத்தை மீளாய்வு செய்து  அவர்களின்  கருத்துக்களையும் இதற்காக சமர்ப்பிக்குமாறு பங்குதாரர்களிடம்  இடைக்கால குழு கோரியது.

குறித்த வரைவைத் தயாரிக்கும் போது அவர்கள் முன்வைத்த பிரச்சினைகள்  மற்றும் ஆலோசனைகள் குறித்து உரிய கவனம் செலுத்தப்படும் என்றும்  பங்குதாரர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அத்துடன்,  இந்த கலந்துரையாடல்களின் போது முன்வைக்கப்பட்ட கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினைகள் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான இடைக்கால செயலக குழு தெரிவித்தது.

உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான இடைக்கால செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அசங்க குணவங்ச மற்றும் அதன் கொள்கை தொடர்பான பிரதானி கலாநிதி யுவி தங்கராஜா, சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரி (கொள்கை)  அசீப் புவாட், நிறைவேற்று அதிகாரி (பொதுமக்கள் தொடர்பு) தினுஷி டி சில்வா, நிறைவேற்று அதிகாரி (பொதுமக்கள் தொடர்பு ) சௌம்ய விக்ரமசிங்க, நிறைவேற்று அதிகாரி (தகவல் தொழில்நுட்பம்) சரித் பெர்னாண்டோ மற்றும் இணைப்பாளர் சரத் கொத்தலாவல  உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.