முதல் காலாண்டுக்குள்ளே வெளிநாட்டு கடன்களை மறுசீரமைக்க எதிர்பார்ப்பு! நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் நம்பிக்கை

வெளிநாட்டு கடன்களை முதல் காலாண்டுக்குள் மறுசீரமைத்து இரு தரப்பு ஒப்பந்தங்களைக் கைச்சாத்திட எதிர்பார்த்துள்ளோம். வரி வலையமைப்பை விரிவுப்படுத்துவதற்காகவே 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வரி கோப்பு ஆரம்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது.

வரி கோப்பு ஆரம்பிக்கும் அனைவரும் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை. வருடாந்தம் 12 லட்சம் ரூபா சம்பளம் பெறுபவர்கள் வருமான வரி செலுத்த வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாழ்க்கை செலவு அதிகரிப்பு மற்றும் மந்த போசணை பாதிப்பு தொடர்பான  சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான  விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –

பொருளாதார மீட்சிக்காகத் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் நடுத்தர மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன என்பதை ஏற்றுக்கொள்கிறோம். கடுமையான தீர்மானங்கள் தற்காலிகமானதே நிலையான தீர்வை நிச்சயம்  பெற்றுக்கொடுக்கும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.

ஸ்ரீதேசிய மற்றும் பொருளாதார காரணிகளால் கடந்த ஆறு காலாண்டுகளாக பொருளாதாரம் ஒடுக்கப்பட்டிருந்தது. 2023 ஆம் ஆண்டு இறுதி காலாண்டில் பொருளாதார வளர்ச்சி சாதகமான நிலையில் முன்னேற்றமடைந்தது. 2024 ஆம் ஆண்டு  பொருளாதார வளர்ச்சியை இரண்டு சதவீதத்தால்  மேம்படுத்த எதிர்பார்த்துள்ளோம்.

சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளைக் கடுமையான  சூழலுக்கு மத்தியில் செயற்படுத்தியுள்ளோம். அந்தத்; தீர்மானங்களால் நாடு தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. பரிந்துரை திட்டங்களை எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு வரை செயற்படுத்த வேண்டும். குறுகிய அரசியல் நோக்கத்துக்காக தற்போதைய மறுசீரமைப்புக்களை இடைநிறுத்தினால் நாடு மீண்டும் வங்குரோத்து நிலையடையும். இதனை எவராலும் தடுக்க முடியாது.

மறுசீரமைக்க முடியாத அளவுக்கு நாட்டின் அரசமுறை கடன் காணப்படுகிறது.இலங்கையின் கடன்களை நிலைபேறான தன்மைக்கு உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பிரதான இலக்காகக் காணப்படுகிறது. வெளிநாட்டுக் கடன்களை மறுசீரமைப்பதற்கு  இருதரப்பு மற்றும் பல்தரப்பு பேச்சுகளில் ஈடுபட்டுள்ளோம். வெளிநாட்டு கடன்களை முதல் காலாண்டுக்குள் கைச்சாத்திட எதிர்பார்த்துள்ளோம்.

வரி வலையமைப்பை விரிவுபடுத்துவதற்காக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வரி கோப்பை ஆரம்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வரி கோப்பை ஆரம்பிப்பவர்கள் அனைவரும் வருமான வரி செலுத்த வேண்டிய தேவையில்லை. வருடாந்தம் 12 லட்சம் வருமானம் பெறுபவர்கள் மாத்திரம் வரி செலுத்த வேண்டும். ஆகவே குறுகிய அரசியல் நோக்கத்துக்காக தற்போது அமுல்படுத்தியுள்ள மறுசீரமைப்புக்களை மாற்றியமைக்கப் போவதில்லை. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.