மருந்து கொள்வனவு மோசடி தொடர்பில் உரிய விசாரணை இடம்பெற்று வருகிறது! சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண உறுதி

மில்லியன் கணக்கான மக்களை வாழவைக்கும் நாட்டின் இலவச சுகாதார சேவை தொடர்பில் மக்கள் நம்பிக்கையை சீர்குலைக்கும்  பிரசாரங்கள் தவிர்த்துக்கொள்ளப்பட வேண்டும். அத்துடன் மருந்து கொள்வனவின்போது இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் மோசடிகள் தொடர்பில் குற்றத்தடுப்பு பிரிவு விசாரணை அதிகாரிகளால்  உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது ஹேஷா விதானகே எம்.பி. எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஹேஷா விதானகே எம்.பி. தமது  கேள்வியின் போது –

அரசாங்க வைத்தியசாலைகளுக்கு மருந்துகளைக் கொள்வனவு செய்யும் போது ஏற்பட்டுள்ள மோசடிகள் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு அது தொடர்பில் அமைச்சின் செயலாளர் தகவல்களை வெளியிட்டுள்ள நிலையிலும் அமைச்சருக்கு எதிராக எத்தகைய சட்டரீதியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

அமைச்சரவை ஊடாக அது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை என்ன என்பதை அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்.

அத்துடன் தரமற்ற மருந்துகள் தொடர்பில் சமூகத்தில் பெரும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அது தொடர்பில் சுகாதார அமைச்சின் நிலைப்பாடு என்ன? – என்றார்.

அது தொடர்பில் அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில் –

சுதந்திர இலங்கையில் மில்லியன் கணக்கான நோயாளர்களுக்கு தரமான மருந்துகளை பெற்றுக் கொடுப்பதில் தொடர்ந்தும் சுகாதார அமைச்சு சிறப்பாக சேவைகளை வழங்கி வருகிறது.

சிறந்த மருந்துகளை பெற்றுக் கொண்டு நாட்டு மக்களில் பெரும்பாலானவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கையைத் தொடர்வதையும் குறிப்பிட வேண்டும்.

நாடு சுதந்திரம் பெற்ற காலத்தில் இந்த நாட்டில் நபர்களின் ஆயுட்காலம் 42 வயதாகவே காணப்பட்டது. நாட்டில் சிறந்த சுகாதார சேவை பலமானதாக முன்னெடுத்து வரும் நிலையிலேயே அது 78 வயதாக அதிகரித்துள்ளது என்பதைக் குறிப்பிட வேண்டும்.

அனைத்து சத்திர சிகிச்சைகளும் இலவசமாகவே வழங்கப்படுகின்றன. மில்லியன் கணக்கான மக்களுக்கு தொடர்ந்து இலவசமாகவே மருந்துகள் வழங்கப்படுகின்றன.

இந்த செயற்பாடுகளில் சிறு தவறுகள் இடம் பெறலாம். எனினும் அதனை வைத்து சுகாதாரத் துறை மீதான மக்கள் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றமை பொருத்தமற்றது. அனைவரும் இணைந்து அந்த நம்பிக்கையைக் கட்டியயெழுப்புவதே அவசியமாக உள்ளது.

மருந்து  மோசடி செயற்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சிஐடி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் சட்டமா அதிபர் திணைக்களம் உள்ளிட்ட  நிறுவனங்கள் அதில் தலையிட்டு உரிய முறையில் அந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அது தொடர்பான சட்டபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான பொறுப்பு சட்டத்துறை சார்ந்த சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

சிறு சிறு தவறுகளை வைத்து முழுமையான சுகாதார சேவை தொடர்பிலும் அவநம்பிக்கையை ஏற்படுத்துவது சிறந்ததல்ல. –  என்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.