சுமார் 13 கோடி ரூபா பெறுமதியான உயர் ரக சிகரெட்டுகள் சரக்குப் பொதிகளிலிருந்து சுங்கப் பிரிவினரால் கைப்பற்றல்!

வெளிநாடுகளில் இருந்து வந்த கொள்கலன்கள் மற்றும் சரக்குப் பொதிகளில் இருந்து சுமார் 13 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதிமிக்க வெளிநாட்டு உயர் ரக சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு சொந்தமான சரக்குப் பொருள் ஏற்றி இறக்கும் முனையத்துக்கு வந்திருந்த சந்தேகத்திற்கிடமான சரக்குப் பொதிகளில் இருந்து  18 லட்சம் உயர் ரக சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவை சுமார் 4 கோடி 54 லட்சம் ரூபா என சுங்கப் பிரிவினரால் மதிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சரக்குப் பொதிகள் டுபாயில் இருந்து விமான தபால் சேவை மூலம் நாட்டை வந்தடைந்துள்ளதோடு, சந்தேகத்திற்கிடமான சரக்குப் பொதிகள் ஆஸ்திரேலியாவிற்கு கொண்டு செல்லப்பட இருந்தன எனவும் தெரியவந்துள்ளது.

இதேவேளை கம்போடியாவில் இருந்து லெபனானுக்கு கொள்கலன்களை ஏற்றிச் சென்ற சரக்கு கப்பல் இலங்கையை வந்தடைந்திருந்த நிலையில் சுங்க வருவாய் கணக்காய்வுப் பிரிவினரால் குறித்த கொள்கலன்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்போது 39 லட்சம் 97 ஆயிரம் 600 சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதன் சந்தைப் பெறுமதி 9 கோடி 94 லட்சத்து 38 ஆயிரம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாக சுங்கப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.