ரணிலையும் சஜித்தையும் ,இணைக்க வெளிநாட்டு தூதர்கள் முயற்சிப்பதாக தெரிவிக்கப்படும் செய்தியில் உண்மை இல்லை சஜித் பிரேமதாஸ தெரிவிப்பு

ரணிலையும் சஜித்தையும் இணைக்க வெளிநாட்டு தூதுவர்களின் ஊடாக முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன என வெளியாகும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை. அதனை முற்றாக நிராகரிக்கிறேன் என  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் விசேட கூற்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

உள்நாட்டு, வெளிநாட்டு  பிரதிநிதிகளைப் பயன்படுத்தி சஜித்தையும் ரணிலையும் இணைக்க பெரும் அரசியல் தந்திரங்கள் முன்னெடுக்கப்படுவதாக சமூக வலைத்தளங்கள் மற்றும் சில ஊடகங்களில் பரப்பப்படுகின்றன.

வெளிநாடுகளின் ஆண், பெண் தூதுவர்களும் அவ்வாறான முயற்சிகளில் ஈடுபடுவதாகவும் தகவல்கள் பரப்பப்படுகின்றன.  வதந்திகள் பரப்பப்படுகின்றன. ஆனால் வெளிநாட்டு ஆண், பெண் தூதுவர்கள் எமது நாட்டின் உள்ளக அரசியல் திருமணங்களுக்காக என்னுடன் கதைத்ததில்லை. கதைக்கப்போவதும் இல்லை. அவை முழுப்பொய்யாகும். பணம் கொடுத்தே இவ்வாறான பொய் செய்திகள் பரப்பப்படுகின்றன. இந்த பொய்யை மக்களிடையே பரப்புவதை உடனடியாக நிறுத்துங்கள் என்று கோருகின்றேன்.

எங்களுக்கு அரசியல் டீல்களை போட வேண்டிய அவசியமில்லை. பொதுமக்களின் முழுமையான ஆதரவு எமக்கு இருக்கிறது. எங்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தை அமைக்க நடவடிக்கை எடுப்போம். அதற்கான மக்களின் ஆசிர்வாதம் எமக்கு எப்போதும் இருக்கிறது. –  என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.