மரக்கறி விலையேற்றத்தைத் தவிர்ப்பதற்கு மாற்றீட்டு பயிர்ச்செய்கை கலந்துரையாடல்

நாட்டில் ஏற்பட்டுள்ள மரக்கறி விலையேற்றத்தைத் தவிர்ப்பதற்கான மாற்றீட்டு பயிர்ச்செய்கைகளை யாழ்.மாவட்டத்தில் முன்னெடுப்பது சம்பந்தமாக, யாழ்,கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதனின் கோரிக்கைக்கு அமைய விசேட மூலோபாய கலந்துரையாடல் விவசாய அமைச்சில் இடம்பெற்றது.

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் தற்போது நிலவும் மரக்கறி தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் தொடர்பாக பிரஸ்தாபிக்கப்பட்டது.

இதன்போது குறித்த மரக்கறிகளை யாழ்.மாவட்டத்திலிருந்தும் பருவகால அடிப்படையில் உற்பத்தி செய்வதன் ஊடாக இவ்வாறான தட்டுப்பாடுகள் மற்றும் விலைத்தளம்பலை தவிர்க்க முடியும் என யோசனை முன்வைக்கப்பட்டது.

இதற்கமைய இவ்வாண்டில் புதிய திட்டங்களை உருவாக்க இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டன.

இவற்றுடன் யாழ்ப்பாணத்துக்கே உரிய சின்ன வெங்காயம், பச்சைமிளகாய் உற்பத்தியை மேம்படுத்துவது தொடர்பாகவும், யாழ்ப்பாணத்தில் உற்பத்தி செய்யப்படும் திராட்சைப்பழங்களை கொண்டு பழச்சாறு உற்பத்தியை யாழ்.மாவட்டத்திலேயே மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்வது தொடர்பாகவும் ஆராயப்பட்டன.

மேலும், யாழ் மாவட்டத்தில் விவசாய அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்படும் இதர திட்டங்களின் ஊடாக விவசாய உற்பத்திகளை பெறுமதி சேர் உற்பத்திகளாக மாற்றுவது தொடர்பாக விவசாய அமைச்சு கவனம் செலுத்தவுள்ளது.

கடந்தாண்டு இறுதியில் விவசாய அமைச்சர் யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்திருந்த போது, விவசாயிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பாகவும் இச்சந்திப்பில் ஆராயப்பட்டன.

விவசாய நிலங்களுக்கு குரங்குகள், கட்டாக்காலி கால்நடைகளால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதற்கான வேலிகள் உள்ளிட்டவற்றை வழங்குவது தொடர்பாக ஆராயப்பட்டதுடன், யாழ்.மாவட்ட விவசாயிகளுக்கான விவசாய மின் இணைப்புக்குரிய கட்டணத்தில் மானியம் வழங்குவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் இந்தச் சந்திப்பில் தெரிவித்தார்.

தற்போதைய நிலையில், உள்ளூர் விதைகளைப் பாதுகாக்கும் தன்மை விவசாயிகள் மட்டத்தில் குறைவடைந்து செல்வதால் விதைகளை இறக்குமதி செய்யும் நிலை அதிகரித்து செல்வதாக சுட்டிக்காட்டப்பட்டது. இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் விதைகள் விவசாயிகளுக்குத் தேவையான காலத்தில் வழங்கப்படாததால், நாட்டில் உணவுத்தட்டுப்பாடுகள் ஏற்படுவதாகவும், அதனைப்போக்க உணவுப்பொருள்கள் இறக்குமதி செய்யப்படுவதால் உள்ளூர் விவசாயிகள் பாதிப்பை எதிர்கொள்கிறார்கள் என்பதும் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

குறிப்பாக, பயறு, உழுந்து உள்ளிட்ட சிறுதானிய உற்பத்திகளை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கான விதைகள் பெரும்போக அறுவடை முடிவடைந்தவுடன் வழங்கப்படவேண்டிய நிலையில் அவை காலம் தாழ்த்தி வழங்கப்படுவதால் கோடை காலத்தில் நாட்டில் உழுந்து பயறுக்கான தட்டுப்பாடு உருவாகும் நிலை தொடர்பில் இக்கூட்டத்தில் விவரிக்கப்பட்டது.

மேலும், கடந்தாண்டு இறுதியில் யாழ்.மாவட்ட விவசாயிகளுக்கு விநியோகிக்கவென கொண்டுவரப்பட்ட விதை உருளைக்கிழங்குகள் பாவனைக்கு உதவாத நிலையில் அழிக்கப்பட்டமையை சுட்டிக்காட்டிய அங்கஜன் இராமநாதன், இதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

இதன்போது கருத்து தெரிவித்த மாகாண விவசாய பணிப்பாளர், யாழ்ப்பாணத்தில் விவசாயத்துக்குத் தேவையான விதைகளைப் பாதுகாத்து பராமரிக்கக்கூடிய வகையில் குளிரூட்டப்பட்ட களஞ்சியமொன்றை அமைப்பதால், விவசாயிகளுக்கு உரிய காலத்தில் விதைகளை வழங்க முடியும் என யோசனை முன்வைத்தார். இதற்காக அச்சுவேலியில் இருக்கும் களஞ்சியத்தை குளிரூட்டப்பட்ட களஞ்சியமாக மாற்றியமைக்க முடியும் எனவும் யோசனை தெரிவித்தார். இதனை உடனடிக் கவனத்தில் எடுத்துக்கொள்வதாக விவசாய அமைச்சர் தெரிவித்தார்.

இவற்றுடன் விவசாய கிணறுகள், குளங்கள், விவசாய வீதிகளை புனரமைப்பது தொடர்பாக ஆராயப்பட்டதுடன், யாழ்.மாவட்டத்தில் விவசாய மாதிரிக்கிராமமொன்றை உருவாக்கி அனைத்து வகையான உணவு விவசாய, கால்நடை வளர்ப்பு, ஏற்றுமதி விவசாய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான யோசனையும் முன்வைக்கப்பட்டது.

யாழ். மாவட்ட விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் கடந்த 2018 காலப்பகுதியில் விவசாய அமைச்சில் அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் இணைந்து பணியாற்றியது போன்று, தற்போதைய நாட்டு நிலமையை கருத்தில் கொண்டும் வடக்கின் விவசாய புரட்சியைக் கட்டமைக்கும் வகையிலும் இப்பணிகளை முன்னெடுக்க தயாராக இருப்பதாக அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

இச்சந்திப்பில், விவசாய அமைச்சின் கீழ் இயங்கும் திணைக்களங்களின் தலைவர்கள், மாகாண திணைக்களத் தலைவர்கள், அமைச்சின் செயலாளர்கள், மாவட்ட மற்றும் பிராந்திய விவசாய அதிகாரிகள், விவசாய அமைச்சின் திட்டப்பணிப்பாளர்கள் உள்ளிட்டோரும், சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக யாழ்.மாவட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.(

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.