ஜனாதிபதியின் உகண்டா விஜயத்தால் ஆபிரிக்க நாடுகளின் உறவு பலமானது! அலி சப்ரி பெருமிதம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உகண்டாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தால் எதிர்காலத்தில் உலகில் துரிதமாக அபிவிருத்தியை எட்டுமெனக் கருதப்படும் 1.3 பில்லியன் மக்கள் வசிக்கும் ஆபிரிக்க நாடுகளுடனான உறவுகளைப் பலப்படுத்திக்கொள்ள முடிந்துள்ளது என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

இந்த விடயம் இலங்கை வெளிவிவகாரக் கொள்கைகளின்போது இதுவரையில் கருத்தில் கொள்ளப்படவில்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

‘ஆபிரிக்காவைப் பார்ப்போம்’ என்ற ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைவான இலங்கையின் புதிய பொருளாதார பயணத்திற்காக ஆபிரிக்க நாடுகளின் முதலீடுகளை ஈர்ப்பதற்கான பின்னணி உருவாகியிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அணிசேரா நாடுகளின் 19 ஆவது அரச தலைவர்கள் மாநாடு மற்றும் சீனா மற்றும் தென் துருவத்தில் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பதற்காக உகண்டாவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொண்டுள்ள உத்தியோகபூர்வ விஜயம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர் –

‘அணிசேரா நாடுகளின் மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உலகளாவிய பிரச்சினைகள், காசா பகுதியின் நிலைவரம், இஸ்ரேல் – பாலஸ்தீன நிலைவரம், அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய தீர்மானங்கள், கடன் சுமையில் முடங்கிக் கிடக்கும் தரப்பினரை மீட்பதற்கான முன்னெடுப்புகள், காலநிலை அனர்த்தம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் உரையாற்றினார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்த உரையை வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பாராட்டினர்.

அதற்கு இணையாக ஆபிரிக்க வலயத்தின் தென் துருவ நாடுகளின் தலைவர்களையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்தித்து கலந்துரையாடினார். மாநாட்டை நடத்திய உகண்டாவின் ஜனாதிபதி,  எத்தியோப்பிய பிரதமர், பெனின் குடியரசின் உப ஜனாதிபதி, பஹாமாஸ் பிரதமர், இந்திய வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை ஜனாதிபதி ரணில் விக்ரசிங்க சந்தித்திருந்தார். மேலும் குறித்த நாடுகளுடனான இருதரப்பு உறவுகளை பலப்படுத்திகொள்வது தொடர்பிலும் அவர் கலந்துரையாடினார்.

பெருமளவில் பேசப்படாத, 1.3 பில்லியன் மக்கள்தொகை கொண்ட, எதிர்காலத்தில் மிக வேகமாக வளர்ச்சியடையும் என்று உலகம் எதிர்பார்க்கும் ஆபிரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்த இந்தப் பயணம் வித்திட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இலங்கை அடைந்து வரும் பொருளாதார வளர்ச்சி மற்றும் அதற்கு ஜனாதிபதியின் பங்களிப்பு ஆகியன இதன்போது அனைவராலும் பாராட்டப்பட்டது.  ஜனாதிபதி நாட்டைப் பொறுப்பேற்பதற்கு முன்னர், இந்த நாடு இருந்த நிலைமையுடன் ஒப்பிடுகையில் இன்று இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தை அனைவரும் பாராட்டினர்.

குறிப்பாக, உகண்டாவின் ஜனாதிபதி யொவேரி முசெவேனி, வீழ்ச்சி அடைந்த நாட்டை மீளக் கட்டியெழுப்ப அவர் ஆற்றிய பங்களிப்புக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேலும், இம்முறை அணிசேரா நாடுகளின் மாநாட்டின் ஊடாக, இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்த உண்மைகளை சர்வதேச சமூகத்திற்கு முன்வைக்கும் சந்தர்ப்பம் எமக்குக் கிடைத்தது. அத்துடன், ஆபிரிக்க பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளுடன் இருதரப்பு உறவுகளை வளர்த்துக்கொள்ள ஜனாதிபதியின் இந்த விஜயம் உதவியது என்றே கூற வேண்டும்.

அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ‘ஆபிரிக்காவைப் பார்ப்போம்’ என்ற எண்ணக்கருவின் கீழ் இலங்கைக்கான புதிய பொருளாதாரப் பயணத்தை ஆரம்பிப்பதற்கு ஆபிரிக்க நாடுகளில் முதலீடு செய்வதற்கு இதன்போது அடித்தளமிடப்பட்டது.

அதற்கமையவே, இரு நாடுகளும் பயனடையும் என்ற நோக்குடன் பெனின் குடியரசுடன் இராஜதந்திர, உத்தியோகபூர்வ மற்றும் சேவை கடவுச்சீட்டுகளை வைத்திருப்பவர்களுக்கு விசா விலக்கு அளிக்க தீர்மானிக்கப்பட்டது.

மேலும், வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் என்ற முறையில், பங்களாதேஷ், பஹ்ரைன், கானா, தன்சானியா, அஸர்பைஜான் போன்ற பல்வேறு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் இருதரப்பு பேச்சுகளை  நடத்தும் வாய்ப்பும் எனக்கு கிடைத்ததோடு, அந்த நாடுகளுடன் நட்புறவை மேலும் பலப்படுத்திக்கொள்ளவும், பொருளாதார உறவுகளை ஏற்படுத்தவும் வாய்ப்பு கிட்டியது.

எனவே, இவ்வாறான மாநாடுகளின் மூலம் சர்வதேச நாடுகளுடன் இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்தி, நாட்டுக்கு நன்மைகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கிறோம்’ என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.