நாடாளுமன்ற தொடரை ஒத்திவைக்கும் நோக்கம் மக்களுக்கு ஜனாதிபதி பகிரங்கப்படுத்த வேண்டும் கம்மன்பில கோரிக்கை

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் பதவி காலம் மூன்றரை வருடங்களை கூட அண்மிக்காத நிலையில் ஐந்தாவது கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்படவுள்ளமை வேடிக்கையானது.

நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைத்து, புதிய கூட்டத்தொடரை ஆரம்பிப்பதன் உண்மை நோக்கத்தை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைத்து, புதிய கூட்டத்தொடரை ஆரம்பிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு அரசமைப்பின்  70(3) சரத்துக்கு அமைய வழங்கப்பட்டுள்ளது.

அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது  என்பதால் ஜனாதிபதி விரும்பிய நேரத்தில் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து, புதிய கூட்டத்தொடரை ஆரம்பிப்பது முறையற்றது.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரை  நாளைய பாராளுமன்ற அமர்வுடன் ஒத்திவைத்து ஐந்தாவது கூட்டத்தொடரை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதி ஆரம்பித்து வைக்க ஜனாதிபதி உத்தேசித்துள்ளதாக அறிய முடிகிறது.

இந்த நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் மூன்றரை வருடங்களை கூட நிறைவு செய்யாத நிலையில் ஐந்தாவது கூட்டத்தொடரை ஆரம்பிப்பது என்பது வேடிக்கையானது.

நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைப்பது என்பது அத்தியாவசியமானதொன்றல்ல, 1977 ஆண்டு முதல் 1988 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஐந்து கூட்டத்தொடர்களை கொண்டதாகவே நாடாளுமன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைப்பதால் கோப்,கோபா மற்றும் அரசாங்க நிதி தொடர்பான குழு உட்பட அமைச்சுசார் ஆலோசனை குழுக்கள் இயல்பாகவே கலைக்கப்படும்.

மீண்டும் புதிய குழு மற்றும் அதற்கான உறுப்பினர் நியமனத்தில் ஆளும் மற்றும் எதிர்தரப்புக்கு இடையில் பாரிய போட்டி நிலவும்.அத்துடன் அதுவரை காலமும் முன்வைக்கப்பட்ட தனிநபர் பிரேரணைகளும் இரத்து செய்யப்படும்.

நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி உரையாடுவார், அதன் பின்னர் விசேட விருந்துபசாரம் இடம்பெறும்.

ஆனால் அரச நிர்வாகத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படாது.அரச நிதியும்,காலமும் மாத்திரம் வீண்விரயமாக்கப்படும்.

ஆகவே நாடாளுமன்றக் கூட்டத்தொடரை ஒத்திவைத்து, புதிய கூட்டத்தொடரை ஆரம்பித்து வைப்பதன் உண்மை நோக்கமென்ன என்பதை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும். ஏனெனில், நாட்டு மக்களின் வரி பணமே இதற்கு செலவழிக்கப்படுகிறது. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.