ஊடகங்களை அடக்கும் நோக்கமில்லை ; சமூக ஊடகங்கள் கண்காணிக்கப்படும்! பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிலான் தெரிவிப்பு

ஊடகங்களை அடக்கும் வகையில் நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் தயாரிக்கப்படவில்லை. சமூக ஊடகங்களின் தவறான செயற்பாடுகள் கண்காணிக்கப்படும். தேசிய மற்றும் சர்வதேச அமைப்பினர் முன்வைத்துள்ள யோசனைகள்  தொடர்பில் விசேட அமைச்சரவை பத்திரத்தை வெகுவிரைவில் முன்வைப்பேன் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில்  இடம்பெற்ற உத்தேச நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –

நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தை கடந்த ஒக்ரோபர் மாதம் 03 ஆம் திகதி முன்வைத்தேன். தேசிய மற்றும் சர்வதேச அமைப்பினர் இந்த சட்டமூலம் தொடர்பில் எம்முடன் பேச்சில் ஈடுபட்டனர். சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் பல திருத்தங்களை முன்வைத்துள்ளது. உயர்நீதிமன்றம் உட்பட தேசிய சர்வதேச அமைப்பினர் முன்வைத்துள்ள திருத்தங்கள் சட்டமூலத்தில் உள்வாங்கப்படும்.

இந்த சட்டமூலம் தொடர்பில்  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பொலிஸ் பிரிவின் சட்ட அதிகாரி ஆகியோர் சிங்கப்பூருக்கு சென்று சமூக வலைத்தள நிறுவனங்களுடன் மூன்று நாள்கள் கலந்துரையாடினர். இந்த நிறுவனங்கள் கடந்த 08 ஆம் திகதி தமது பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர். சகல தரப்பினரது பரிந்துரைகளை முழுமையாகப் பரிசீலனை செய்து ஏற்றுக்கொள்ளக் கூடிய திருத்தங்கள் எவை, ஏற்றுக்கொள்ள முடியாத திருத்தங்கள் என்ன என்பதைத் தீர்மானித்துள்ளோம்.

ஏற்றுக் கொண்டுள்ள திருத்தங்களைத் தற்போது சட்டமூலத்துக்குள் உள்வாங்க முடியாது.யோசனைகளைப் பிரத்தியேக திருத்தமாக முன்வைக்கலாம் என சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார். உயர்நீதிமன்றம் முன்வைத்துள்ள திருத்தங்கள் சட்டமூலத்தில் உள்வாங்கப்படும். முன்வைக்கப்பட்டுள்ள புதிய யோசனைகளை அமைச்சரவையில் முன்வைப்பேன். அதனைத் தொடர்ந்து வர்த்தமானி வெளியிடப்படும். அதற்கும் ஒரு தரப்பினர் உயர்நீதிமன்றம் செல்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.

சமூக ஊடகங்கள் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. சமூக வலைத்தளங்கள் ஊடாக நிதி மோசடி, உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை பதிவேற்றல், சிறுவர் மற்றும் மகளிர்களுக்கு எதிரான செயற்பாடுகளை ஊக்குவித்தல் ஆகிய முறையற்ற செயற்பாடுகளைத் தடுக்கும் நோக்கில் இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஊடகங்களை முடக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்குக் கிடையாது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகளுக்கு எதிராக உண்மைக்கு புறம்பான செய்திகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகுகின்றன. உண்மைக்கு எதிரான செய்திகளால் பல நெருக்கடிகள் தோற்றம் பெற்றுள்ளன.

கடந்த ஆண்டு மாத்திரம் சமூக ஊடகங்கள் தொடர்பில் 8,000 அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.  நிர்வாண புகைப்படங்களை  சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ததாக 669 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.ஆகவே இவற்றைக் கண்காணிப்பது கட்டாயமாகும்.

இந்த சட்டமூலத்தை தொடர்ந்து ஐந்து துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய விசேட ஆணைக்குழு ஜனாதிபதியால் நியமிக்கப்படும்.இந்த ஆணைக்குழுவின் செயற்பாடுகள் சுயாதீனமாக முன்னெடுக்கப்படும். ஆகவே  நாட்டு மக்களின் கருத்து சுதந்திரத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. – என்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.