சிறீதரனின் ஐக்கிய அழைப்புக்கு விக்னேஸ்வரன் பச்சைக்கொடி : ஒன்றிணைவது காலத்தின் கட்டாயமெனவும் தெரிவிப்பு

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் புதிய தலைவர் சிவஞானம் சிறீதரன் தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு விடுத்துள்ள அழைப்பிற்கு தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் பச்சைக்கொடி காண்பித்துள்ளார்.

சிறீதரன் விடுத்துள்ள அழைப்பு தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, சிவஞானம் சிறீதனுடன் இணைந்து இறுதியாக டெல்லிக்குச் சென்றபோது, தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துக்கின்ற அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவது பற்றியும், அதற்காக அரசியல் பிரதிநிதிகளிடையே ஏற்படுத்தப்பட வேண்டிய இணக்கப்பாடுகள் தொடர்பிலும் நான் கலந்துரையாடல்களைச் செய்திருந்தேன்.

அதன்பின்னர் அவர் தமிழரசுக்கட்சியின் தலைமைக்கான போட்டியில் இறங்கியபோது, நான் பிறிதொரு கட்சியைச் சேர்ந்தவராக இருந்தபோதும், தமிழ்த் தேசியத்தையும், எமது மக்களுக்காகவும் குரல்கொடுக்கவல்லவராகவும், அனைவரையும் ஒருங்கிணைத்துச் செல்லக்கூட ஆற்றல் உள்ளவராகவும் சிறீதரனை அடையாளம் காண்பதாக வெளிப்படையாகவே குறிப்பிட்டிருந்தேன் என்பதை இச்சந்தர்ப்பத்தில் மீள நினைவு படுத்துவதற்கு விரும்புகின்றேன்.

அந்த வகையில், அவர் தமிழரசுக்கட்சிய்ன தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அதற்கு எனது வாழ்த்துக்கள். அதேநேரம், சிறீதரனாலேயே அனைத்துத் தரப்பினையும் ஒருங்கிணைத்துதொடர்ந்தும் முன்னகர்ந்து செல்வதற்கான ஆற்றல் உள்ளது என்பதை நான் தற்போதும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் நாளுக்கு நாள் நெருக்கடிகளை எதிர்நோக்கிய வண்ணம் இருக்கின்றார்கள்.

குறிப்பாக ஆக்கிரமிப்பு, அடக்குமுறைப் பிரச்சினைகள் என்பனவற்றுக்கு அப்பால் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் இருந்து பெருமளவானவர்கள் புலம்பெயர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இந்த நிலைமைகள் மேலும் தீவிரமடைகின்றபோது, தமிழ்மக்களின் பிரதிநிதித்துவங்களில் இழப்புக்கள் ஏற்படும். அதுமட்டுமன்றி அவர்களுக்குச் சொந்தமான பூர்வீகமான நிலங்கள் பறிபோகும் நிலைமைகள் மேலும் தீவிரமடையும் ஆபத்துக்கள் உள்ளன.

ஆகவே, தமிழ் மக்களின் விடயங்களை முறையாக அனைத்து அரசியல் கட்சித்தலைவர்களும் ஒன்றிணைந்து முன்னெடுப்பதற்காக அவர்களை ஒருங்கிணைத்து ஒருமித்துச் செயற்படுவதற்கான நடவடிக்கைகளை அவர் முன்னெடுக்க வேண்டும். அதற்கான முழு ஒத்துழைப்புக்களையும் எமது தரப்பில் வழங்கவுள்ளோம் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.