காலி நகர அபிவிருத்தித் திட்டத்தை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்!

ஒரு நிறுவன கட்டமைப்பின் கீழ் காலி நகர அபிவிருத்தித் திட்டத்தை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் விடுத்துள்ளதுடன் காலி இலக்கிய விழாவையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.

காலி அபிவிருத்தி தொடர்பில் ஆராய்வதற்காக நேற்று (27ம் திகதி) கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, காலி நகரம் மற்றும் காலி கோட்டை பிரதேசங்களுக்கு விஜயம் செய்து அபிவிருத்தி நடவடிக்கைகளை பார்வையிட்டார்.

காலி கோட்டையில் அமைந்துள்ள அரச நிறுவனங்களையும் காரியாலயங்களையும் காலி கோட்டைக்கு வெளியே கொண்டு வருவதற்கான செயற்பாடுகள் மந்தகதியில் இடம்பெற்று வருவது தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி, அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.

காலி நகரத் திட்டத்தை அமுல்படுத்துவதில் நகர அபிவிருத்தி அதிகார சபை, தொல்பொருள் திணைக்களம் மற்றும் ஏனைய அனைத்து நிறுவனங்களும் ஒரே நிறுவனக் கட்டமைப்பின் கீழ் செயற்பட வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இப்பகுதி சுற்றுலாத்துறை ஊக்குவிப்பிற்கான திட்டங்களை துரிதப்படுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

காலி கோட்டைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, அங்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டு அவர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தார். அருகில் உள்ள கடைக்கு சென்று கடை உரிமையாளர்களுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி, காலி கோட்டையின் அபிவிருத்தி தொடர்பில் அவர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தார்.

 

காலி இலக்கிய விழா

இதேவேளை, காலி கோட்டையை அண்மித்த பகுதியில் நேற்று (27) நடைபெற்ற 2024 காலி இலக்கிய விழாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கலந்துகொண்டார்.

உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள், வெளியீட்டாளர்கள் ஒன்றிணையும் சர்வதேச இலக்கிய விழாவான காலி இலக்கிய விழா பல வருடங்களுக்குப் பின்னர் இவ்வருடம் மீண்டும் நடைபெறுவது விசேட அம்சமாகும்.

இரண்டாவது நாளான நேற்று (27), செயலமர்வுகள், கலந்துரையாடல்கள், விரிவுரைகள் உள்ளிட்ட பல செயற்பாடுகள் இடம்பெற்றதுடன், இதில் கலந்துகொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலக்கியவாதிகளுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.அதனைத் தொடர்ந்து அங்குள்ள புத்தகக் கூடங்களுக்கு சென்ற ஜனாதிபதி புத்தகங்களைப் பார்வையிட்டார்.

சர்வதேச கலை,இலக்கிய அனுபவங்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கும் இலங்கையின் இலக்கியத் துறையை உலகிற்கு எடுத்துச் செல்வதற்கும் சிறந்த வாய்ப்பை வழங்கும் காலி இலக்கிய விழா காரணமாக ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தற்பொழுது காலி மற்றும் கொக்கல பகுதிகளுக்கு வருகை தந்துள்ளனர்.

ஜனவரி 25ஆம் திகதி ஆரம்பமான காலி இலக்கிய விழா இன்றுடன்(28) நிறைவடைகிறது. அமைச்சர்களான ரமேஷ் பத்திரன, மனுஷ நாணயக்கார மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன ஆகியோரும் இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.