உயர்நீதிமன்றத்தின் 13 பரிந்துரைகள் கவனத்தில் எடுக்காமல் நிகழ்நிலைகாப்பு சட்டம் நிறைவேற்றம்! முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டு

இங்கிலாந்தில் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை அறிமுக்கப்படுத்த முன்னர் அது தொடர்பில் 4 ஆண்டுகள் ஊடக நிறுவனங்களுடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் இலங்கையில் உயர்நீதிமன்றத்தால் முன்மொழியப்பட்ட 13 பரிந்துரைகளைக் கூட கவனத்தில் கொள்ளாமல் குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் –

இவ்வாண்டு ஆட்சி மாற்றத்துக்கான ஆண்டாகும். மக்கள் தேர்தலை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். ஒக்ரோபரில் நிச்சயம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும். மக்கள் ஆணையின்றியே தாம் ஆட்சியை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை ஜனாதிபதியும், பொதுஜன பெரமுனவினரும் நன்கு அறிவர்.

இந்நிலையில் சமூக ஊடகங்களைகக் கட்டுப்படுத்துவதற்காக நிகழ்நிலை பாதுகாப்பு சட்ட மூலமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவற்றின் ஊடாக மக்கள் தகவல்களைத் தெரிந்துத் கொள்வதை தடுப்பதற்காக இந்தச் சட்டம் அவசரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தால் பரிந்துரைக்கப்பட்ட 13 திருத்தங்கள் குறித்த சட்டத்தில் உள்வாங்கப்படவில்லை.

எனவே தான் அதனை சட்டமா அதிபருக்கு அனுப்பி பரிசீலித்து அதன் பின்னரே கையெழுத்திடுவேன் என்று கூற வேண்டிய நிலைமை சபாநாயகருக்கு ஏற்பட்டுள்ளது. பேஸ்புக், கூகுள், வட்ஸ்அப் உள்ளிட்ட நிறுவனங்களும் இதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. சட்டங்களின் ஊடாக இவற்றைக் கட்டுப்படுத்த தீர்மானித்தால், நாமும் அதற்குரிய நடவடிக்கைகளை எடுப்போம் என அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இங்கிலாந்தில் இவ்வாறான சட்டமொன்றை நிறைவேற்றுவதற்கு 4 ஆண்டுகள் ஊடக நிறுவனங்களுடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டன.

ஆனால் இலங்கையில் அவ்வாறு ஏதேனும் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டனவா? 2001இல் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்ற பின்னர் ஊடகவியலாளர்களுக்கு எதிரான சட்டத்தை உடன் அமுலாகும் வகையில் நீக்கினார்.

ஆனால் இன்று அந்த ரணில் விக்கிரமசிங்க இல்லை. மேற்கத்தேய உடையணிந்த ராஜபக்ஷக்களின் கொள்கைவாதியாகவே இன்றைய ரணில் விக்கிரமசிங்க செயற்படுகின்றார். இவ்வாறு எந்த முயற்சிகளை முன்னெடுத்தாலும் தமக்கான சந்தர்ப்பத்தில் மக்கள் உரிய பதிலை வழங்குவார்கள். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.