அரசியல் புரட்சியொன்றை ஏற்படுத்துவதற்காக பரந்தளவிலான கூட்டணி அமைக்க ஏற்பாடு! சம்பிக்க வியூகம்
நாட்டில் அரசியல் மாற்றம் ஒன்றை ஏற்படுத்தும் நோக்கில் தரம்மிக்க குழுவினருடன் பரந்துபட்ட அரசியல் கூட்டணி அமைக்க கலந்துரையாடி வருகிறோம்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அந்த குழுவில் உள்ள பொருத்தமான ஒருவரையே வேட்பாளராகக் களமிறக்க திட்டமிட்டுள்ளோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
அரசியல் ரீதியில் எதிர்காலத்தில் மேற்கொள்ள திட்டமிட்டிருக்கும் நடவடிக்கை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் –
நாட்டில் அரசியல் புரட்சி ஒன்றை ஏற்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். ஏனெனில் நாட்டை வங்குரோத்து அடையச் செய்த குழுவினரை ஜனநாயக ரீதியில் வீட்டுக்கு அனுப்ப நாட்டு மக்கள் தயாராகி உள்ளனர்.
அதனால் அரசியல் மாற்றம் ஒன்றை ஏற்படுத்த தகுதிவாய்ந்தவர்களுடன் பரந்துபட்ட அரசியல் கூட்டணி ஒன்றை அமைக்க தற்போது நாங்கள் கலந்துரையாடி வருகிறோம்.
அத்துடன் எமது பரந்துபட்ட கூட்டணியை நாடாளுமன்றத்தில் இருப்பவர்களும் நாடாளுமன்றத்துக்கு வெளியில் இருப்பவர்களையும் இணைத்துக்கொண்டு கூட்டணி ஒன்றை எதிர்வரும் காலத்தில் கட்டியெழுப்புவோம்.
இந்த கூட்டணியில் இருக்கும் மிகவும் பொருத்தமான வேட்பாளரை நாங்கள் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம். அதேபோன்று பொருத்தமான வேட்பாளர் குழுவொன்றை நாடாளுமன்ற தேர்தலுக்கு நாங்கள் முன்வைப்போம்.
அத்துடன் மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து வருகின்றனர். அரசாங்கம் பாரியளவிலான வரி சுமையை மக்கள் மீது சுமத்தி இருக்கிறது.
எந்தவித தேடிப்பார்ப்பும் இல்லாமலும் முறையான திட்டமிடல் இல்லாமலும் டின் இலக்கம் ஒன்றின் ஊடாக மக்களை வரி முறைமைக்கு உள்வாங்கிக்கொண்டிருக்கிறது.
மேலும் அரசாங்கம் கடந்த வாரம் நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் அனுமதித்துக்கொண்டது.
நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காக அதிக சந்தர்ப்பம் இருப்பது இணையவழி சேவை எனும் டிஜிற்றல் சேவை மூலமாகும். சமூக வளைத்தளங்களை ஒழுங்குபடுத்தப்போவதாக தெரிவித்து, அரசாங்கம் நாட்டுக்கும் நாட்டின் பொருளாதாரத்துக்கும் மரண அடியை வழங்கி இருக்கிறது.
சமூகவலைத்தளம் ஊடாக சேறுபூசும் நடவடிக்கைகள் இடம்பெறுவது உண்மை என்றாலும் அதனை மேற்கொள்ள வழிவகுத்த பிரிவினரே சட்ட திட்டங்களைக் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இணையவழி சேவை வழங்கும் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ளாமல் அரசாங்கம் நினைத்த பிரகாரம் சட்ட திட்டங்களை கொண்டுவந்துள்ளதால் இணையவழி நேவை வழங்கும் நிறுவனங்கள் தங்களின் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
முழு உலகிலும் இணையவழி சேவைகளில் வரி அறவிடப்படுவது 6 நாடுகளிலாகும். அதில் இலங்கையும் ஒன்றாகும்.
அத்துடன் தற்போது அமுலில் உள்ள பயங்கரவாத தடுப்புச்சட்டத்தை துஷ்பிரயோகம் செய்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கைதுசெய்வதற்கு அரசியல் குண்டர்கள் செயற்பட்டன நிலையில், எதிர்வரும் காலத்தில் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் அனுமதித்துக்கொண்டு, அரசாங்கத்தின் பிரதான எதிர்பார்ப்பாக இருப்பது அரசாங்கத்துக்கு எதிரான தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் சாதாரண மக்களை அடக்குவதாகும். – என்றார்.












கருத்துக்களேதுமில்லை