ஜேர்மன் பிரஜையின் கைப்பையை திருடியகுற்றச்சாட்டில் இருவர் கைது

ஜேர்மன் நாட்டில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பெண்ணொருவரின் கைப்பையை திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் சங்கானையைச் சேர்ந்த 28 வயது பெண் மற்றும் 21 வயது ஆண் சகோதரர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து திருடப்பட்ட பொருள்களும் மீட்கப்பட்டன எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

திருநெல்வேலி சந்தையில் பொருள்களைக் கொள்வனவு செய்ய வந்த வெளிநாட்டு பெண்ணின் கடவுச்சீட்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள், 500 யூரோ, 20,000 ரூபா அடங்கிய கைப்பையே கைக்குழந்தையுடன் வந்த பெண்ணொருவரால் நூதனமான முறையில் அபகரிக்கப்பட்டது.

திருட்டுச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் வெளிநாட்டவரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

கண்காணிப்பு கமராவின் உதவியுடன் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கீழ் இயங்கும் புலனாய்வு பிரிவினர் சந்தேக நபர்களை கைது செய்தனர்.

சந்தேக நபர்களும் திருடப்பட்ட பொருள்களும் மேலதிக நடவடிக்கைக்காக கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.