கல்முனை ஆதார வைத்தியசாலையில்   உலக தொழுநோய் தின நிகழ்வுகள்!

( வி.ரி.சகாதேவராஜா)

கல்முனை  ஆதார வைத்தியசாலையில் தொழுநோய் தினத்தினையொட்டி செவ்வாய்க்கிழமை வைத்தியசாலையின் கேட்போர்கூடத்தில் தொழுநோய் தின நிகழ்வு நடைபெற்றது.

வைத்தியசாலையின் தோல் நோய் பிரிவினரின் ஏற்பாட்டில் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர். இரா. முரளீஸ்வரன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது

இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தோல் வைத்திய நிபுணர் டாக்டர்.என். தமிழ்வண்ணன் கலந்து சிறப்பித்தார்.

வரவேற்புரையை தோல் நோய் மருத்துவர் டாக்டர் ஜே.எச்.. மஷாகிட் வழங்கியதோடு விசேட உரையை வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி இரா.முரளீஸ்வரன் வழங்கியிருந்தார்.

தோல் வைத்திய நிபுணர் டாக்டர் என். தமிழ்வண்ணனால் தொழுநோய் பற்றிய விழிப்புணர்வு விளக்கவுரை நிகழ்த்தப்பட்டது.

அவர் தனதுரையில் தொழுநோயின் வரலாறு, அதன் வகைகள், அறிகுறிகள் முக்கியமாக தொடுகையுணர்வு குறைவான தோலின் நிறமாற்றங்கள், நரம்புத்திரள்கள், ஏனைய தோலின் மாற்றங்கள் இதற்கு சிகிச்சை முறைகள் மருந்துகள் மற்றும் அதன் பக்க விளைவுகள் அதற்கான தீர்வுகள் பற்றி விளக்கமாக விவரித்தார்.

இதனைத் தொடர்ந்து வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்திய நிபுணர்கள், உத்தியோகத்தர்கள் ஊழியர்களால் டாக்டர் தமிழ்வண்ணனுக்கு மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னமும் வழங்கப்பட்டு கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற்றது.

நன்றியுரையை தோல் சிகிச்சை பிரிவு பொறுப்பு தாதிய உத்தியோகத்தர் திருமதி வி. இராஜலோஜினி  நிகழ்த்தினார்.

நிகழ்வில் வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் டாக்டர் எம். என்.எம். சுவைப், வெளிநோயாளர் பிரிவு பொறுப்பு வைத்தியர் டாக்டர் ஆர்.கணேஷ்வரன், தாதிய பரிபாலகர் என்.சசிதரன், தாதிய பரிபாலகி திருமதி எல். சுஜேந்திரன், பிரதம மருந்தாளர் பி.சுதர்ஜினி, பிரதான சுகாதார முகாமைத்துவ உதவியாளர் திருமதி ரோஸி சுகுமார், வைத்திய அதிகாரிகள், தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள், ஊழியர்களும் கலந்து  சிறப்பித்திருந்தனர். நிகழ்ச்சியை சுகாதார கல்வி பிரிவு பொறுப்பு தாதிய உத்தியோகத்தர் திருமதி என்.மனோஜினி தொகுத்து வழங்கியிருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.