2 ஆவது நாளாக இடம்பெறும் சுகாதார தொழிற்சங்க போராட்டத்தால் வவுனியாவில் நோயாளர்கள் அவதி!

 

இரண்டாவது நாளாக தொடரும் சுகாதார தொழிற்சங்கப் போராட்டத்தால் வவுனியா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக செல்லும் நோயாளர்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

72 சுகாதார தொழிற்சங்கங்கள் வியாழக்கிழமை முதல் நாடு தழுவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. வைத்தியர்களுக்கு வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ள 35,000 ரூபா அல்லது வருகை மற்றும் போக்குவரத்துக் கொடுப்பனவுகளை தங்களுக்கும் வழங்க வேண்டுமென கோரியே குறித்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுத்துள்ளன.

குறித்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக வவுனியா வைத்தியசாலையிலும் பணிபகிஸ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால் நோயாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக வவுனியாவில் கிளினிக், வெளிநோயாளர் பிரிவு ஆகியவற்றுக்கு வருகை தந்த நோயாளிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதுடன், பலர் சிகிச்சை பெற முடியாது ஏமாற்றத்துடன் வீடு திரும்புவதையும், தனியார் மருத்துவ நிலையங்களை நோக்கிச் செல்வதையும் அவதானிக்க முடிகிறது.

இதேவேளை, பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கிராமப் புறங்களில் இருந்து வரும் நோயாளர்கள் சிகிச்சை பெற முடியாது ஏமாற்றதுடன் வீடு திரும்புவதுடன், சிகிச்சை பெறாது தொடர்ந்தும் நோய் தாக்கத்தின் பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய அபாய நிலையும் ஏற்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.