அனைத்து இன மக்களுக்கும் சம உரிமைகளை அனுபவிக்கும் சூழ்நிலை மலரும் பட்சத்திலேயே நிலையான சுதந்திரம் பிறக்கும்! அதற்காக நாம் அனைவரும் ஒன்றுபடுவோம் என்கிறார் ஜீவன்

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இன நல்லிணக்கமும் மிக முக்கிய விடயமாகும். எனவே, இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் சம உரிமைகளை அனுபவிக்கக்;கூடிய சூழ்நிலை மலரும் பட்சத்திலேயே நிலையான சுதந்திரமும் பிறக்கும். அதற்காக நாம் அனைவரும் ஒன்றுபடுவோம். அதற்கான சிறந்த களமாக சுதந்திர தினம் அமையட்டும்.

– என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸன் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளவை வருமாறு –

பல்லின சமூகங்களும் வாழும் இலங்கைத் திருநாடு சுதந்திரம் அடைந்து இன்றோடு 76 ஆண்டுகளாகின்றன. இந்த உன்னதமான நாளை இலங்கையர்களாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து எமது நாட்டுக்கே உரித்தான பாரம்பரிய நடைமுறைகளுடன் கொண்டாடுவோம். சுதந்திரம் என்பது தனக்கு மட்டும் அல்ல தன்னை சூழ உள்ளவர்களுக்கும் இருக்க வேண்டும் என்ற உணர்வோடு செயற்படுவோம்.

நாடு சுதந்திரம் அடைந்தாலும் எமது மலையகப் பெருந்தோட்ட மக்கள் அரசியல், பொருளாதாரம், சமூக ரீதியிலான பிரச்சினைகளில் இருந்து இன்னும் விடுதலையாகவில்லை. எனவேதான் எமது மக்களையும் தேசிய நீரோட்டத்தில் சங்கமிக்க வைப்பதற்காக எல்லாவிதமான நடவடிக்கைகளையும், நகர்வுகளையும் முன்னெடுத்துவருகின்றோம். லயன் யுகத்தில் இருந்து விடுபட வேண்டுமெனில் காணி உரிமை அவசியம், அதனைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை பல்லின சமூகமும் வாழும் இலங்கையில் இன நல்லிணக்கம், ஐக்கியம் என்பது மிக முக்கியம். இலங்கையில் நீடித்த அமைதி, நிலையான அபிவிருத்தி என்பன இன நல்லிணக்கத்திலேயே தங்கியுள்ளன. எனவே, இன நல்லிணக்கத்துக்காகவும் நாம் கூடுதல் அக்கறையுடன் செயற்பட வேண்டும். – என்றுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.