கம்பஹா மாவட்ட திஹாரிய உலமாக்களின்சேவை முஸ்லிம் சமூகத்திற்கு நல்லதோர் முன்னுதாரணம்!

கலாநிதி ஹஸன் மௌலானா கருத்து

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

முஸ்லிம்கள் பிளவுபடுவதைத் தடுக்குமுகமாக முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு கம்பஹா மாவட்ட திஹாரியைச் சேர்ந்த அஹ்லுஸ் ஸுன்னத்-வல்-ஜமாஅத் தரீக்கா, தப்லீக் ஜமாஅத், ஜமாஅதே இஸ்லாமி மற்றும் தௌஹீத் ஜமாஅத் அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 150 இற்கும் மேற்பட்ட உலமாக்கள் ஒன்றிணைந்து வேற்றுமையில் ஒற்றுமையுடன் ‘துரறு உலமா திஹாரிய’ என்ற அமைப்பை உருவாக்கி ஒற்றுமையென்ற ஒரே கொடியின் கீழ் சகோதரத்துவத்துடன் இணைந்து செயற்படுவது முஸ்லிம் சமூகத்திற்கு நல்லதோர் முன்னுதாரணமாகத் திகழ்கின்றது என இஸ்லாமிய ஒற்றுமை பேரவையின் ஸ்தாபகர்களில் ஒருவரான அல்-ஹாஜ் அஸ்-ஸெய்யித் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி மனமகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

அல்-ஆலிம் முஹம்மத் பர்தியுடைய (ஹஸனி,அரூஸி) தந்தை அல்-ஹாஜ் முஹம்மத் நாஸிர் கடந்த சனிக்கிழமை காலம் சென்றதை முன்னிட்டு அவருக்கு அனுதாபம் தெரிவிப்பதற்காக திஹாரியிலுள்ள அவரது இல்லத்துக்கு இஸ்லாமிய ஐக்கிய பேரவை ஸ்தாபகர்கள் சார்பில் விஜயம் செய்த வேளையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முஸ்லிம்களுக்கிடையே ஏற்படும் பிளவுகளை இல்லாதொழித்து முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு துரறு உலமா திஹாரிய அமைப்பினர் வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்த நல்ல வேலைத்திட்டத்தை இலங்கையில் வாழும் சகல முஸ்லிம்களும் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்வதுடன், முஸ்லிம்களை ஒற்றுமைப்படுத்துவதற்கான முயற்சிகளை முஸ்லிம் சமூகத்திலுள்ள உலமாக்கள், புத்திஜீவிகள் மற்றும் சமூக சேவைகள்  அமைப்புகள் முன்வந்து ஒன்றிணைந்து  மும்முரமாகச் செயற்படுவது காலத்தின் தேவையாகும் என கலாநிதி ஹஸன் மௌலானா மேலும் தெரிவித்தார்.

அல்-ஆலிம் முஹம்மத் பர்தி (ஹஸனி,அரூஸி) அவர்கள், துரறு உலமா திஹாரிய அமைப்பின் முக்கியமான ஒருவராகவும் அஹ்லுஸ் ஸுன்னத்-வல்-ஜமாஅத் தரீக்காவை சேர்ந்த மூத்த உலமாக்களில் ஒருவராகவும் முஸ்லிம் சமூகத்திற்கு செயலாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

துரறு உலமா திஹாரிய அமைப்பு கடந்த மூன்று வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டு பல சமூக பணிகளை ஒற்றுமையுடன் செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இந்த விஜயத்தின் போது இஸ்லாமிய ஐக்கியப் பேரவையின் நிர்வாக உத்தியோகத்தர் பியாஸ் முஹம்மத், துரறு உலமா திஹாரிய அமைப்பின் முக்கியமான மூத்த உலமாக்கள் மற்றும்  அல்-ஆலிம் பர்தி ஹஸனி அவர்களின் சகோதரர்கள், குடும்ப அங்கத்தவர்களென பலரும் கலந்து கொண்டனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.