நிகழ்நிலை காப்புச்சட்டம் சட்டரீதியிலேயே அனுமதி! ஆஷு மாரசிங்க கூறுகிறார்

நிகழ்நிலை காப்புச்சட்டம் நாடாளுமன்றத்தில் சட்டத்துக்கு முரணாக அனுமதிக்கப்படவில்லை. அத்துடன் குறித்த சட்டமூலத்தில் சபாநாயகர் கைச்சாத்திட்டதில் இருந்து அது நாட்டின் சட்டமாகும். அதனால் சமூகவலைத்தளம் மூலம் யாருக்கு எதிராகவும் பொய் பிரசாரங்கள் மேற்கொண்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் –

நிகழ்நிலை காப்புச் சட்டம் கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தது.

குறித்த சட்டமூலம் தயாரிக்கப்பட்ட போது அதற்கு உயர் நீதிமன்றம் சில திருத்தங்களை சமர்ப்பித்திருந்தது. அந்தத் திருத்தங்கள் அனைத்தும் உள்வாங்கப்பட்டே சட்ட வரைவு தயாரிக்கப்பட்டிருந்தது. அதன் பிரகாரமே குறித்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில்  சமர்ப்பிக்கப்பட்டு அனுமதித்துக்கொள்ளப்பட்டது.

அதனால் நாடாளுமன்றத்தில் சேர்த்துக்கொள்ளப்படும் நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை. குறித்த சட்டம் தயாரிக்கப்படும் போது அதில் திருத்தம் மேற்கொள்ள சில தரப்பினர் திருத்தங்களை முன்வைத்திருந்தனர். என்றாலும் இறுதி நேரத்தில் அதனை எடுத்துக்கொள்ள முடியவில்லை.

என்றாலும் உயர் நீதிமன்றத்தால் முன்வைக்கப்பட்டிருந்த திருத்தங்களுடன் சட்டமூலத்தை சேர்த்துக்கொண்ட பின்னர், அமைச்சரவையில் குறித்த சட்டத்துக்கு திருத்தம் கொண்டுவந்து, நாடாளுமன்றத்தில் அதனை சமர்ப்பிக்க அரசாங்கம் தீர்மானித்தது.

அதன் பிரகாரமே தற்போது நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவைக்கு சில திருத்தங்களை முன்வைக்க விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் நடவடிக்கை எடுத்திருக்கிறார்.

அடுத்த அமைச்சரவையின் போது அந்தத் திருத்தங்களை முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். அதேநேரம் நிகழ்நிலை காப்புச் சட்டம் முறையாகவே அனுமதித்துக்கொள்ளப்பட்டது என சட்டமா அதிபர் மனித உரிமை ஆணைக்குழுவுக்குக்கும் தெரிவித்திருக்கிறார்.

எனவே, சபாநாயகர் கைச்சாத்திட்டத்தில் இருந்து நிகழ்நிலை காப்புச்சட்டம் தற்போது நாட்டில் அமுலில் உள்ளது. அதனால் சமூகவலைத்தளங்களை பயன்படுத்திக்கொண்டு தனிநபர்களை இலக்குவைத்து பொய் பிரசாரங்கள் அவதூறான விடயங்கள் பிரசுரிக்கப்படுமாக இருந்தால், அவர்களுக்கு எதிராக குறித்த சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்க முடியும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.