கல்முனையில் அத்தியாவசியப் பொருட்களுக்கு நிர்ணய விலை

கல்முனை மாநகராட்சி ஆள்புல எல்லைக்குள் பொது மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்களை நிர்ணய விலைக்கு பெற்றுக்கொடுக்க மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதன் பிரகாரம் நாளை வியாழக்கிழமை (09) தொடக்கம் மரக்கறி வகைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கான அதிகூடிய சில்லறை விலைகள், நுகர்வோர் அதிகார சபை உத்தியோகத்தர்களின் முன்னிலையில் மொத்த வியாபாரிகளின் இணக்கப்பாட்டுடன் மாநகர முதல்வரினால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

குறித்த அத்தியாவசியப் பொருட்களின் நிர்ணய விலையை விட அதிகரித்து விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான அறிவுறுத்தல்கள் மற்றும் உத்தரவுகளையும் சம்மந்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு மாநகர முதல்வர் விடுத்திருக்கிறார்.

இன்று புதன்கிழமை (08) கல்முனை மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்ற கல்முனை மாநகர கொரோனா வைரஸ் தடுப்பு செயலணியின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் தொடர்பில் கூடிய அவதானம் செலுத்தப்பட்டது. இக்கூட்டத்திற்கு நுகர்வோர் அதிகார சபை உத்தியோகத்தர்களும் கல்முனை மாநகர சபைக்குடப்பட்ட மொத்த வியாபாரிகளும் விசேடமாக அழைக்கப்பட்டிருந்தனர்.

இதன்போது அரசாங்கத்தினால் நிர்ணய விலைக்குட்படுத்தப்பட்டுள்ள பருப்பு, டின் மீன் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் தவிர்ந்த ஏனைய அத்தியாவசியப் பொருட்களுக்கு மாநகர முதலவர், தனக்குள்ள அதிகாரத் தத்துவத்தின் கீழ் விலை நிர்ணயம் செய்து தருவாராயின், அதனை நடைமுறைப்படுத்துவதற்கு தம்மால் நடவடிக்கை எடுக்க முடியும் என்று நுகர்வோர் அதிகார சபை உத்தியோகத்தர்களான ஏ.எச்.எச்.எம்.நபார், இசட்.எம்.சாஜித் ஆகியோர் தெரிவித்தனர்.

மாநகர முதல்வர் உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றங்களின் தலைமைகளினால் அத்தியாவசியப் பொருட்களுக்கு நிர்ணயம் செய்து தரப்படுகின்ற விலைப்பட்டியலை நடைமுறைப்படுத்துமாறு நுகர்வோர் அதிகார சபையின் தலைமைப்பீடத்தினால் தமக்கு பணிப்புரை விடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

அத்துடன் வர்த்தக நடவடிக்கைகளின்போது கடைப்பிடிக்க வேண்டிய சட்ட விதிகள் குறித்தும் நுகர்வோர் அதிகார சபை உத்தியோகத்தர்களினால் வர்த்தகர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

இங்கு கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்;

“கோரோனோ வைரஸ் தாக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் எமது மக்களை அந்த வைரஸ் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளுடன், மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றியும் நியாய விலையில் கிடைப்பதையும் நாம் உறுதிப்படுத்த வேண்டியுள்ளது.

எமது செயலணியின் இதற்கு முந்திய ஒருங்கிணைப்புக் கூட்டங்களின்போது, அத்தியாவசியப் பொருட்கள் அதிகரித்த விலைக்கு விற்கப்படக் கூடாது என்று எம்மால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்கள் பெரும்பாலான வர்த்தகர்களினால் உதாசீனம் செய்யப்பட்டதாக நிறைய முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இது தொடர்பில் நாம் நடத்திய விசாரணைகளின்போது, மொத்த வியாபாரிகள் அதிகரித்த விலைக்கு தமக்கு பொருட்களை விநியோகிப்பதாலேயே தமக்கு நஷ்டம் ஏற்படாத வகையில் கொள்வனவு செய்த விலையில் இருந்து சற்று அதிகரித்த விலைக்கு தாம் வியாபாரம் செய்ய வேண்டியிருப்பதாக சில்லறை வியாபாரிகள் எம்மிடம் தெரிவிக்கின்றனர்.

ஆகையினால் தொடர்ந்தும் இந்த நிலையை நீடிக்க அனுமதிக்க முடியாது. இனிவரும் காலங்களில் சட்டப்படி நடவடிக்கை எடுப்பத்தைத் தவிர வேறு வழியில்லை என்கிற நிலைப்பாட்டிற்கு வந்துள்ளேன். அதனால்தான் மொத்த வியாபாரிகளை இங்கு அழைத்திருக்கிறேன். உங்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பில்லாமல், உங்களது இணக்கப்பாட்டுடன் கல்முனை மாநகர சபை எல்லைக்குள் மரக்கறி வகைகளுக்கும் ஏனைய அத்தியாவசிய பொருட்களுக்குமான விலைகளை நிர்ணயம் செய்து, அதனை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கின்றேன்.

இங்கு நிர்ணயம் செய்யப்படுகின்ற விலைகளை விட ஒரு சதமேனும் நீங்கள் அதிகரித்து விற்க முடியாது. நீங்கள் சில்லறை வியாபாரிகளுக்கு விற்கின்ற பொருட்களுக்கான உரிய விலைகள் அடங்கிய பற்றுச்சீட்டை அவர்களுக்கு வழங்க வேண்டும். சில்லறை வியாபாரிகள் அந்த பற்றுச்சீட்டை தம் வசம் வைத்துக் கொள்ள வேண்டும். எமது சோதனை நடவடிக்கைகளின்போது இப்பற்றுச்சீட்டு பரிசீலிக்கப்படும். வியாபாரத் தலங்களில் பொருட்களின் விலைகள் அவசியம் காட்சிப்படுத்தப்பட வேண்டும். அத்துடன் கொரோனா வைரஸ் தடுப்புக்கான சுகாதார நடைமுறைகளும் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்.

மரக்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அதிகரித்த விலைகளுக்கு விற்கும் வியாபாரிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக மாநகர சபை அதிகாரிகளுடன் நுகர்வோர் அதிகார சபை உத்தியோகத்தர்கள், பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள்” என்று முதல்வர் ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.

மரக்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் அதிகூடிய விலைகள் தொடர்பில் வர்த்தகர்களிடம் கேட்டறிந்து கொண்ட முதல்வர், கல்முனை மாநகராட்சி ஆள்புல எல்லைக்குள் அப்பொருட்களுக்கான சில்லறை விலைகள் தொடர்பிலான நிர்ணய விலைப்பட்டியலை தயாரித்து வெளியிட்டுள்ளார். (விலைப்பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது.)

இக்கூட்டத்தில் கல்முனை மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார், கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர், கல்முனை வடக்கு உப பிரதேச செயலாளர் அதியசயராஜ், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் சார்பில் கணக்காளர் எம்.எம்.நஜிமுதீன், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கே.சுகுணன், கல்முனை பொலிஸ் பொறுப்பதிகாரி கே.எச்.சுஜீத் பெரேரா, கல்முனை இராணுவ முகாம் பொறுப்பதிகாரி தர்மசேன, மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்ஷாத் காரியப்பர், கணக்காளர் ஏ.எச்.தஸ்தீக், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.றிஸ்பின், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எம்.அஜ்வத், கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கணேஷ்வரன், நுகர்வோர் அதிகார சபை உத்தியோகத்தர்களான ஏ.எச்.எச்.எம்.நபார், இசட்.எம்.சாஜித், மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ரொஷான் அக்தர், அப்துல் மனாப், பொன் செல்வநாயகம், எஸ்.இராஜன், முபாரிஸ் தாஜுதீன், மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களான ஜே.எம்.நிஸ்தார், ஏ.எம்.பாறூக், ஏ.எல்.எம்.ஜெரீன், கல்முனை வர்த்தகர் சங்கத் தலைவர் கே.எம்.எம்.சித்தீக், சாய்ந்தமருது வர்த்தகர் சங்கத் தலைவர் எம்.எஸ்.எம்.முபாரக், மருதமுனை வர்த்தகர் சங்கத் தலைவர் எம்.எம்.எம்.ஷபீக், கல்முனை பொதுச் சந்தை வர்த்தகர் சங்கத் தலைவர் ஏ.பி.ஜமால்தீன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.