கொழும்பிலுள்ள வௌி மாவட்டத்தாரை 20ஆம் திகதி வரை அனுப்ப முடியாதாம்!

தொடர் ஊரடங்குச் சட்டத்தால் கொழும்பில் சிக்கியுள்ள வெளிமாவட்ட மக்களை இம்மாதம் 20ஆம் திகதிவரை, அவரவரின் சொந்த ஊர்களுக்கு அனுப்புவதில்லை என்று அரசு தீர்மானித்துள்ளது என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அவர் மேலும் கூறியுள்ளதாவது:-

“சுகாதாரத்துறையின் கோரிக்கையின்படி மேல் மாகாணத்தில் தங்கியுள்ள வெளிமாவட்ட மக்களை எதிர்வரும் 20ஆம் திகதிவரை சொந்த ஊருக்கு அனுப்புவதில்லை என்று அரசு முடிவு எடுத்துள்ளது என கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் விஜயதாஸ ராஜபக்‌ஸ என்னிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌சவுடன் நாம் கலந்துரையாடவுள்ளோம்.

எது எப்படி இருந்தாலும், தமது சொந்த ஊர்களுக்குச் செல்லும்வரை கொழும்பில் சிக்கியுள்ள வௌிமாவட்டத்தவருக்கு, வாழுமிடங்களில் வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தாம் உறுதியாக இருக்கின்றோம்” – என்று குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் சனிக்கிழமை காலை, கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.