போலியான தட்டுப்பாட்டினை உருவாக்கி நியாமற்ற வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர்கள் மீது கடும் நடவடிக்கை!

நியாயமற்ற வர்த்தக நடவடிக்கககளில் ஈடுபடும் வர்த்தகர்கள் பாரபட்சமின்றி சட்டத்தின் முன்னால் நிறுத்தப்படுவார்கள் என பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் வவுனியா மாவட்ட பொறுப்பதிகாரி ச.நிலாந்தன் தெரிவித்தார்.

மோசடியான முறையில் வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர்கள் தொடர்பாக அவர் இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையிலேயே  இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், “நியாயமற்ற முறையில் மோசடியாக ஈடுபடும் வர்த்தகத் துறையினரை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள் வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள இன்றைய சூழலில் அன்றாடப் பிழைப்பிற்கு அல்லலுறும் மக்களிடம் நியாயமற்ற விலையில் அத்தியாவசியப் பொருட்களை அதிக விலையில் விற்பனை செய்யும் வியாபாரிகள் தொடர்பாக பலமுறைப்பாடுகள் எமக்குக் கிடைக்கப் பெற்றுள்ளன.

சந்தையில் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக போலியான தட்டுப்பாட்டினை உருவாக்கி நிர்ணய விலையிலும் பார்க்க அதிக விலையில் அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் ஒருவகை தந்திரோபாயத்தை ஒரு சில வியாபாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

அத்தகைய வியாபாரிகள், பொருட்களைப் பாதுக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளமை எமது புலனாய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் வவுனியா மாவட்டத்தில் உள்ள அரிசி ஆலைகளில் தாராளமாக அரிசி கையிருப்பில் உள்ள அதேவேளை அரிசியாக்கக்கூடிய நிலையில் நெல்லும் தாராளமாக உள்ளது.

அத்துடன் கட்டுப்பாட்டு விலையான 98 ரூபாய்க்கு நாட்டரிசி மற்றும் சம்பா அரிசியினை விற்பனை செய்ய முடியும். இங்கும் சில அரிசி ஆலை உரிமையாளர்கள் அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட விலையிலும் பார்க்க அதிக விலையில் பிற மாவட்டங்களுக்கு அரிசியினை சூட்சுமமாக விற்பனை செய்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

இவைதவிர, உள்ளூர் கடைகளில் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள நேரத்தில் அவசர தேவைக்காக பொருட்களை வாங்க வருபவர்களிடம் நியாயமற்ற விலையில் பின்கதவால் இடம்பெறும் வியாபார நடவடிக்கைகளிலும், பொருட்களின் நிறையிலும் மோசடிகள் இடம்பெறுவது தொடர்பாக பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். இத்தகைய செயற்பாடுகளுக்கு நாம் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

வர்த்தகர்கள் முறையற்ற வியாபாரத்தின் மூலம் கொள்ளை இலாபம் சம்பாதிப்பதற்கான தருணம் இதுவல்ல. மாறாக சேவை மனப்பாங்குடன் தமது வியாபார நடவடிக்கைகளை முன்னைடுக்க வேண்டும். அசாதாரண சூழ்நிலை ஆரம்பித்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது முதல் இன்றுவரை (கிட்டத்தட்ட 3வாரங்கள்) 50இற்கும் மேற்பட்ட முறையற்ற வியாபார நடவடிக்கைகளுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அத்தியாவசியப் பொருட்களை கொள்முதல் செய்து விநியோகிக்கும் பிரதான முகவர்களும் மக்களின் பொருளாதார சூழ்நிலையினை கருத்திற்கொண்டு குறைந்தபட்ச இலாபத்துடன் சில்லறை வியாபாரிகளுக்கு பொருட்களை வழங்குவதே வரவேற்கத்தக்கதும் நியாயமானதும்.

சூழ்நிலையினை தமக்கு சாதகமாகப் பயன்படுத்தும் சிலர் சிலவகைப் பொருட்களை வீட்டிற்குக் கொண்டுசென்று (Home Delivery) கொடுக்கிறார்கள். இது மக்கள் தம் தேவையினை இலகுவான முறையில் பூர்த்தி செய்ய முடிகிறது என்ற தோற்றப்பாட்டைக் காட்டினாலும் இத்தகைய சேவைக்காக அவர்கள் அறவிடும் கட்டணம் மிக உயர்வாகக் காணப்படுகிறது. இது தொடர்பாகவும் மக்கள் விழிப்புடன்
இருக்க வேண்டும் .

அசாதாரண சூழ்நிலையிலும் நியாயமான விலையில் மக்கள் பொருட்களை பெற்றுக்கொள்ள கூடிய வகையில் வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை உத்தியோகத்தர்கள் விழிப்போடும் சமூக அக்கறையுடனும் பணியாற்றி வருகிறார்கள்” என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.