வீட்டு வேலைக்கு வைத்திருந்த 4 லட்சம் ரூபாவை மக்கள் பணிக்காக்கிய பிரதேசசபை உறுப்பினர்!

வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர் கந்தையா ஜினதாஸ் (சீனன்) தனது வீட்டு வேலைக்காக வைத்திருந்த நிதியை சுயதொழில் மேற்கொள்ளும் 470 குடும்பங்களின் வாழ்வுக்காக வழங்கியுள்ளார்.

நாட்டில் கொரோனா அச்சுறுத்தலால் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டு சுயதொழில் மேற்கொள்ளும் மக்கள் தமது அன்றான தேவைகளைப் பூர்த்திசெய்வதற்காகப் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

அளவெட்டி கிழக்கு, கணேஸ்வரம் ஆகிய கிராமசேவகர் பிரிவுகளில் நாளாந்த தொழில் புரிந்து தமது ஜீவனோபாயத்தை மேற்கொள்பவர்களே அதிகம் உள்ளனர். நாட்டின் இயல்புநிலை பாதிக்கப்பட்டதால் அவர்கள் பெரும் சிரமப்பட்டுள்ளார்கள்.

தனக்கு வாக்களித்த மக்களின் துயர்துடைப்பதற்காக – அந்தப் பிரதேச மக்கள் வாக்களித்து பிரதேசசபைக்குத் தெரிவுசெய்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் க.ஜினதாஸ்,  ஒரு மக்கள் சேவகனாக அவர்கள் அல்லல்படும் சமயத்தில் ஏனையவர்களுக்கு முன்மாதிரியாக அவர்கள் துயர் துடைத்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் சொந்தப் பணத்தை மக்களுக்காகப் பயன்படுத்துகின்றமை பெரிய விடயமன்று. ஆனால், எந்தச் சலுகைகளுமற்ற ஒரு பிரதேசசபை உறுப்பினர் தனது வீட்டு வேலைக்காக வைத்திருந்த 4 லட்சம் ரூபாவை மக்கள் பணிக்காக பயன்படுத்தியமை உண்மையில் பாராட்டுக்குரிய விடயம்.

அவர் தனது செயற்பாட்டை செய்தியாகப் பிரசுரிக்க விரும்பவில்லை. ஆயினும் தமிழ் சி.என்.என். ஆசிரியபீடம் வலிந்து அவரிடம் இந்த செய்தி தொடர்பான விவரங்களைப் பெற்று பிரசுரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.