மட்டக்களப்பில் இ.போ.ச. பேருந்திலும் மதுபானம் கடத்தல்: சாலை முகாமையாளர் உட்பட 4 பேர் கைது!

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள வேளையில் வாழைச்சேனையில் இருந்து மட்டக்களப்பு நகருக்கு இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தில் மதுபானக் கடத்தல் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், மதுபானப் போத்தல்களை கடத்திச்சென்ற சென்ற சாலை முகாமையாளர், பேருந்து சாரதி, நடத்துநர் உட்பட நான்கு பேரை நேற்று (சனிக்கிழமை) மாலை கும்புறுமூலை சோதனைச் சாவடியில் வைத்து கைதுசெய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சி.ஜ.தனஞ்சய பெரமுன தெரிவித்தார்.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, சம்பவதினமான நேற்று மாலை கும்புறுமூலை பொலிஸ் சோதனைச் சாவடியில் மட்டக்களப்பு நோக்கிப் பிரயாணித்த குறித்த பேருந்தை நிறுத்தி பொலிஸார் சோதனையில் ஈடுபட்டனர். இதன்போது பேருந்தில் சட்டவிரோதமாக கொண்டுசெல்லப்பட்ட 15 மதுபானப் போத்தல்களை கைப்பற்றியதுடன் நால்வர் கைதுசெய்யப்பட்டனர்.

குறித்த பேருந்து, சாலை முகாமையாளரின் அலுவலக விடய பாவனைக்காக பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் சாலை முகாமையாளர் இந்த மதுபானக் கடத்தலில் ஈடுபட்டுள்ளார் என பொலிஸாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.