மன்னாரில் இடைநிறுத்தப்பட்டிருந்த காற்றாலை மின் உற்பத்தி அபிவிருத்தி திட்டம் மீண்டும் ஆரம்பம்:மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோன்றாஸ் ஊடகசந்திப்பு.

(தலைமன்னார் நிருபர் வாஸ் கூஞ்ஞ)
ஒரு வாரம் கொனோரா காரணமாக முடக்கப்படிருந்த மன்னார் தாராபுரம் கிராமம்
கடந்த ஞாயிறுடன் (12.04.2020) விடுவிக்க மன்னார் அரசாங்க அதிபர் சிபாரிசு
செய்துள்ளார். மன்னாரில் மின்சார தேவையை முன்னிருத்தி சில நிபந்தனைகளுடன்
மன்னார் காற்றாலை மின் உற்பத்தி வேலைத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல
அரச அதிபர் அனுமதி வழங்கியுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்
சி.ஏ.மோன்றாஸ் இவ்வாறு தெரிவித்தார்.

திங்கள் கிழமை (13.04.2020) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோன்றாஸ்
ஊடகவியலாளர் மத்தியில் தெரிவிக்கையில்

கொரோனா வைரஸ் தொற்று நோயின் பாதிப்புக் காரணமாக மக்கள் இன்று தங்கள்
வீடுகளில் முடங்கிய நிலையில் தங்கள் புத்தாண்டை கழித்துக்
கொண்டிருக்கின்றார்கள்.

இந்தவேளையில் அனைவருக்கும் தனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்
கொண்டு எவ்வளவு தூரம் நாம் ஒவ்வொருவரும் எமக்கு வழங்கப்பட்டிருக்கும்
அறிவுரைக்கு அமைய வெளியில் வராது நாம் இருப்போமாகில் விரைவில் கொனோரா
தொற்று நோயிலிருந்து விடுபட ஏதுவாகும் என்றார்.

மன்னார் மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற செயல்பாடுகளை மன்னார் மாவட்ட
அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தெரிவிக்கையில்

(உணவு விநியோகம்)

மன்னார் மாவட்டத்துக்கு மூன்று வழிகளில் உணவு விநியோகத்தை மேற்கொண்டு
வருகின்றோம். அதாவது நிவாரண உணவல்ல மாறாக மக்களுக்குத் தேவையான உணவுத்
தேவைகள்.

ஒன்று சதொசா நிறுவனம். இங்கு ஐந்து கிளைகளைக் கொண்டுள்ளது. மற்றையது
பலநோக்கு கூட்டுறவு சங்கம் தற்பொழுது சிறிது சிறிதாக இயங்கிக் கொண்டு
வருகின்றது. இவ் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்துக்கு மக்கள் நலன் கருதி
பொது மக்களுக்கு சிறந்த முறையில் உணவு விநியோகம் சிறந்த முறையில் நடைபெற
வேண்டும் என்பதற்காக சிறிது நிதி ஒதுக்கீடும் வழங்குவதற்கான
நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

அடுத்து தனியார் நிறுவனத்தின் மூலமாகவும் உணவு விநியோகம் நடைபெற்று
வருகின்றது. இதில் சில தனியார் நிறுவனங்கள் விலை தலம்பல்களை ஏற்படுத்தி
வருகின்றார்கள்.

ஆனாலும் நான் அவர்களுக்கு இறுக்கமான பணிப்புரையை வழங்கியுள்ளேன். ஏக்
காரணம் கொண்டும் உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்கக் கூடாது என்றும்.

இதை மீறி செயல்படும் தனியார் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட
நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பருப்பு மற்றும் மீன் ரின்
ஆகியவற்றில் விலையில் பாதிப்பான நிலையில் இருந்து வருகின்றது.

மன்னாரைப் பொறுத்தமட்டில் மக்கள் அதிகமாக பாவிக்கும் கீரி சம்பா அரிசி
போதியளவு எமது களஞ்சியத்தில் இருக்கின்றது. அத்துடன் 943 மெற்றிக் தொன்
நெல்லும் எம்மிடம் காணப்படுகின்றது. தனியாரிடமும் இருப்பதால் மன்னார்
மாவட்டத்தைப் பொருத்தமட்டில் அரசிக்கு எவ்வித தட்டுப்பாடும் நிலவாது.
மாவும் வவுனியாவிலிருந்து கிடைப்பதால் அவற்றிற்கும் தட்டுப்பாடு இல்லை.

அங்கர் பால் மாதான் இங்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது. ஆனால் மன்னாரைப்
பொறுத்தமட்டில் இங்கு பசுக்கள் அதிகமாக காணப்படுவதால் உள்ளுர்
உற்பத்தியில் மக்கள் தங்கள் கவனத்தை செலுத்தினால் இந்த குறையும்
தீர்ந்ததாக இருக்கும்.

(உதவித் திட்டங்கள்)

அரசாங்கத்தின் உதவித் திட்டங்களைப் பொறுத்தமட்டில் சமூர்த்தி திட்டங்கள்
ஊடாக 23117 பயனாளிகளில் 20790 பேர் தலா 5000 ரூபா வீதம் பெற்றுள்ளனர்.
சுமார் 103.9 மில்லியன் ரூபா பணம் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதைவிட சமூர்தி திட்டத்தில் காத்திருப்போர் என்ற பட்டியலும் எங்கள்
கைவசம் இருந்தது சமூர்த்தி பணிப்பாளர் நாயகம் கேட்டுக் கொண்டதுக்கிணங்க
8164 பெயர் கொண்ட பட்டியல் இருந்தது இவர்களில் 7146 பேருக்கு 36.23
மில்லியன் ரூபா பணமும் வழங்கப்பட்டுள்ளது.

இதைவிட மேலதிகமாக முதியோர் மற்றது மாற்றுத் திறனாளிகளுக்கான கொடுப்பணவு
அடுத்து கிட்னி பாதிப்புக்குள்ளான கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டுள்ளன.

இந்தவகையில் 3207 முதியோர்களில் 3086 முதியோருக்கு 5000 ரூபா வீதமும்.
மாற்றுத் திறனாளிகளில் 1583 நபர்களில் 1480 பேருக்கும் கிட்னி
பாதிப்புக்குள்ளானவர்களில் 253 நபர்களில் 248 பேருக்கு இதுவரை
கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன.

இவ் கொடுப்பனவுகளை பெறாதவர்களுக்கு இவ்வாரத்துக்குள் வழங்கப்பட்டுவிடும்.
இதைவிட நாங்கள் வயோதிபர் 231 பேருக்கும் மாற்றுத்திறனாளிகள் 35
பேருக்கும் வழங்குவதற்கான அனுமதி கோரப்பட்டுள்ளது.

இவர்களுக்கான கொடுப்பனவு அடுத்த வாரத்தில் கிடைக்கலாம் என எதிர்பார்த்து
நிற்கின்றோம். இவையும் கிடைக்கப் பெற்றதும் பாதிப்புக்குள்ளான யாவரும்
நன்மை அடைவார்கள்.

இத்துடன் இவ் சூழல் காரணமாக தொழில் பாதிப்படைந்தவர்கள் என 5988 நபர்கள்
காணப்படுவதால் எங்கள் மாவட்டத்திலுள்ள உத்தியோகத்தர்கள் மூலம் நிதியை
சேகரித்து ஆளுநரின் அனுமதியுடன் குடும்பத்தில் இரண்டு அங்கத்துவர்கள்
குறைந்தவர்களுக்கு 1000 ரூபா வீதமும், இரண்டுக்கும் ஐந்து உறுப்பினர்கள்
கொண்டவர்களுக்கு 1800 ரூபாவும் ஐந்து பேருக்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு
தலா 2000 ரூபா பணமாக வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

(தாராபுரம் விடுவிப்பு)

மன்னாரைப் பொறுத்தமட்டில் கொனோரா வைரஸ் பாதிப்பு இதுவரை ஏற்படவில்லை.
இருந்தும் தாராபுரம் இரண்டு கிராம அலுவலகர்கள் கொண்ட பகுதி.
இங்கு புத்தளத்திலிருந்து வருகை தந்த நபர் ஒருவரால் தாராபுரம் பகுதி
கடந்த 07.04.2020 லிருந்து ஒரு வாரமாக முடக்கப்பட்ட நிலையில்
காணப்படுகின்றது.

தற்பொழுது அவ் பகுதியில் கொனோராவுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லையென
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரால் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து
அவ் கிராமம் 12.04.2020 லிருந்து விடுவிக்கும்படி உயர் மட்டத்துக்கு
சிபார்சு செய்துள்ளேன். ஆகவே தாராபுரம் ஊரடங்கு தளர்வின்போது அவ் கிராமம்
விடுவிக்கப்படும்.

(காற்றாலை)

மன்னார் தலைமன்னார் வீதியில் நடுகுடாப் பகுதியில் 30 கோபுரம்
அமைக்கப்படும் மின் உற்பத்தி நிலையம் திட்டம் நடைபெற்று வந்தது.

அவ் வேலை திட்டம் கொனோரா அச்சுறுத்தல் காரணமாக எனது வேண்டுகோளுக்கிணங்க
இடைநிறுத்தப்பட்டிருந்தது. இங்கு சீனா, மற்றும் இந்தியாவிலிருந்து
வந்தவர்களால் இவ் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

ஆனால் தற்பொழுது இவ் திட்டத்தை முன்னெடுப்பதற்கான கோரிக்கை
முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால் வெளிநாட்டவர் இதில் ஈடுபடுவதால் இப்பகுதி
மக்கள் மத்தியில் ஓர் பயம் அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதையிட்டு திட்டப்பணிப்பாளரை அழைத்து இங்கு கடமையில் உள்ளவர்கள்
எக்காரணம் கொண்டும் அவ்விடத்தைவிட்டு வெளியே வரக்கூடாது என்ற
அறிவுரைக்கமையவே இவ் திட்டத்தை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுவிடயமாக கட்டளைத் தளபதி மற்றும் சிரேஷ;ட பொலிஸ் அதிகாரிக்கும்
தெரிவித்துள்ளேன் இவ் நடைமுறையை இறுக்கமாக கடைப்பிடிக்கும்படி என்றார்.

எமக்கு அடிக்கடி மின்சார இடையூறு ஏற்படுவதால் இவ் திட்டம் எமக்கு
முக்கியமானது. அந்தவகையிலேயே இதை முன்னெடுத்துச் செல்ல அனுமதி
வழங்கப்பட்டுள்ளதாகவும் இதையிட்டு மக்கள் அச்சம் கொள்ளத்
தேவையில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.