தனிமைப்படுத்தலுக்கு வடக்கில் தனித் தீவு! – இராணுவத் தளபதி தெரிவிப்பு

“கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இந்தியாவிலிருந்து இலங்கைக்குள் எவராவது சட்டவிரோதமாக ஊடுருவினால் அவர்களைத் தடுத்து வைப்பதற்கும், தனிமைப்படுத்தல் நடவடிக்கையை முன்னெடுப்பதற்கும் வடக்கில் தீவொன்று உள்ளது.”

– இவ்வாறு கொரோனா தடுப்பு தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரான இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகின்றது. அங்கிருந்து கடல் மார்க்கமாக யாராவது இலங்கைக்குள் ஊடுருவினால் அவர்களைத் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்துவதற்கு வடக்கில் தனித்தீவொன்று தயார் நிலையில் இருப்பதாகக் கூறப்படுகின்றது. அவ்வாறான ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளனவா என்று எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே இராணுவத் தளபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“வடக்கில் கிளிநொச்சி மாவட்டத்தில் பாலைதீவு என்று தீவொன்று உள்ளது. அந்தத் தீவில் எந்தவொரு நபரும் தற்போது இல்லை. அவ்வாறு யாராவது வந்தால் அங்கு தடுத்துவைக்க முடியுமா என்ற கருத்தாடல் உருவானது. கடற்படையிடம்தான் இது பற்றி கூறப்பட்டது.

தேவையேற்படும் பட்சத்தில் தனிமைப்படுத்தல் நடவடிக்கையை முன்னெடுப்பதற்கோ அல்லது எவரையாவது தடுத்துவைப்பதற்கோ இவ்வாறு தீவொன்று எம் வசம் உள்ளது” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.