கொரோனா வதந்தி: மேலும் 7 பேர் கைது – சி.ஐ.டியின் வேட்டையில் இதுவரை 16 பேர் சிக்கினர்
கொரோனா வைரஸ் தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு போலிச் செய்திகளைப் பரப்பிய குற்றச்சாட்டில் மேலும் 07 சந்தேக நபர்களைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைதுசெய்துள்ளது.
கடந்த ஏப்ரல் 10ஆம் திகதி முதல் நேற்று (12) வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 07 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதில் இரண்டு சந்தேக நபர்கள் கடந்த வெள்ளிக்கிழமை (10) பெலிகல மற்றும் கட்டுகஸ்தோட்டையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் நேற்றுமுன்தினம் (11) கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஒருவருக்கு எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நேற்றுமுன்தினம் (11) வெலிமடை, கடவத்தை, ராகமை பகுதிகளில் மேலும் 04 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது. இதைவிட நேற்று (12) நொச்சியாகம பகுதியில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அந்தவகையில் கொரோனா வைரஸ் பரவுவது குறித்து பல்வேறு வகையான போலிச் செய்திகளை வெளியிட்டதாகத் தெரிவித்து இதுவரை 16 சந்தேக நபர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை