ரஞ்சனுக்கு ஏப். 20 வரை விளக்கமறியல்

பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில், கைதுசெய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு இம்மாதம் 20ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

அவர் நேற்று (14) நுகேகொடை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது..

முன்னாள் எம்.பி. ரஞ்சன் ராமநாயக்க, பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில், மாதிவலவிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வீட்டுத் தொகுதியில் வைத்து நேற்று (13) மாலை 7 மணியளவில் மிரிஹான பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இது தொடர்பில் தனது பேஸ்புக் பக்கத்தில் நேரடி வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர், இக்கட்டான சூழ்நிலையில் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கை தொடர்பில், பொருட்களை ஏற்றி வந்த வாகனம் ஒன்றை தனது வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்காததால், பொலிஸாருடன் வாக்குவாதம் செய்ததாகக் கூறுகின்றார்.

ஆயினும் வான் ஒன்றில் வந்த அவரது உடற்பயிற்சி சிகிச்சையாளர் எனத் தெரிவிக்கப்படும் நபர் ஒருவர் ஊரடங்கு அனுமதிப் பத்திரமின்றி, மாதிவெலவிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வீட்டுத் தொகுதியில் நுழைய முற்பட்ட வேளையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குறித்த நபர், எம்பிலிபிட்டியவிலிருந்து பிலியந்தலைக்கு உலர் உணவு போக்குவரத்துச் செய்வதற்கு வழங்கப்பட்ட ஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தி, உலர் உணவுப் பொருட்கள் எதுவும் இன்றிய வான் ஒன்றில் பிலியந்தலையிலிருந்து மாதிவெல நாடாளுமன்ற உறுப்பினர் கட்டடத் தொகுதிக்குள் நுழைய முற்பட்ட வேளையில் அவரைப் பொலிஸார் விசாரித்துள்ளனர்.

இதன்போது அவ்விடத்திற்கு வந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்து, அவர்களைத் திட்டியுள்ளார். இது தொடர்பில் அங்கு கடமையிலிருந்து பொலிஸார் ஒருவர் அவரது தொலைபேசியில் வீடியோ ஒன்றையும் எடுத்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்