கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர்தான் தேர்தலாம்! – அரசின் நிலைப்பாடு இதுதான் என்கிறார் அமைச்சர் சந்திரசேன…

“கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்த பின்னரே பொதுத்தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசு கவனம் செலுத்தும்” என்று அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.

நெருக்கடியான சூழ்நிலையில், மக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொள்ளாது அரசு தேர்தலை நடத்துவதற்கு முயற்சிக்கின்றது என்று எதிரணி உறுப்பினர்களால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஜனாதிபதியின் செயலரால் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு அனுப்பட்ட கடிதத்தை வைத்துக்கொண்டு எதிரணிகள் அரசியல் செய்வதற்கு முற்படுகின்றன.

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தி நாட்டு மக்களை பாதுகாப்பதற்காகவும், இயல்பு நிலைக்கு அவர்களை அழைத்துச் செல்வதற்காகவும் அரசு பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவருகின்றது.

ஜனாதிபதி, பிரதமர், முப்படையினர், பொலிஸார், சுகாதாரத் துறையினர் என பலர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர். இதற்கு எதிரணியினர் மதிப்பளிப்பதில்லை. மாறாக நெருக்கடியான சூழ்நிலையிலும் அரசியலைச் செய்வதற்கே முயற்சிக்கின்றனர்.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு முன்னெடுக்கும். எனினும், தேர்தலை எதிர்கொள்ள முடியாமல் வங்குரோத்து நிலைக்கு வந்துவிட்டதாலேயே எதிர்க்கட்சிகள் அஞ்சுகின்றன” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.