பொதுத்தேர்தல் இப்போது வேண்டாம்! – ஐ.தே.க. வலியுறுத்து…

கொரோனா வைரஸ் முழுமையாக கட்டுக்குள் வந்து, நாட்டில் இயல்புநிலை திரும்புவதற்கு முன்னர் பொதுத்தேர்தல் நடத்தப்படுமானால், அது ‘கொரோனா’ என்ற எமனுக்கு நாட்டு மக்களை பலிகொடுக்கும் ‘பலி பூசைக்கு ஒப்பான செயலாகிவிடும்” என்று ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“முழு உலகுக்குமே அச்சுறுத்தலாக மாறியுள்ள ‘கொவிட் -19’ வைரஸிலிருந்து நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவரும் நிலையில், மறுபுறத்தில் ‘மொட்டு – 20’ என்ற வைரஸ் நாட்டு மக்களுக்கு தற்போது அச்சுறுத்தலாக மாறிவருகின்றது.

குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்கு அவசர, அவசரமாக தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அறியமுடிகின்றது.

நாட்டு மக்களுக்குப் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இவ்வாறு தேர்தல் நடத்தப்படுமானால் அது ஜனாதிபதிக்கும், அரசுக்கும் பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும்.

நாட்டு மக்களுக்கு ஏதேனும் விபரீதம் ஏற்பட்டால் அதற்கு ஜனாதிபதி தலைமையிலான அரசே பொறுப்புக் கூறவேண்டும். ஆகவே, தேர்தலை நடத்துவதற்கு இது ஏற்புடைய காலப்பகுதி அல்ல” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.