கிளிநொச்சியில் இதுவரை வைரஸ் தொற்று இல்லை: முழங்காவில் தொற்றாளர்கள் குறித்து அரச அதிபர்

கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரைக்கும் எவருக்கும் கொரோனா தொற்று இல்லையென கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முழங்காவில் நாச்சிக்குடா கடற்படையின் தனிமைப்படுத்தல் நிலையத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் எவரும் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் வைத்து இன்று (புதன்கிழமை) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி, முழங்காவில், நாச்சிக்குடா கடற்படை தனிமைப்படுத்தல் முகாமுக்கு கடந்த 13ஆம் திகதி ஜா-எல, மட்டக்குளி, ராகம பிரதேசங்களில் இருந்து 32 பேர் மேற்படி கடற்படை தனிமைப்படுத்துல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டனர். இவர்களில் ஆறுபேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மக்கள் மத்தியில் தவறான செய்தி பரவியதனை அடுத்து அவர்களிடத்தே அச்சம் ஏற்பட்டது. எனவே இது தொடர்பாக மக்களிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தைத் தவிர்க்கும் வகையில் மாவட்ட அரச அதிபரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

இதன்போது, “கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரைக்கும் எவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. அதற்கான சாத்தியப்பாடுகள் குறைவாகவே காணப்படுகிறது. எனவே மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம்! சுகாதாரப் பிரிவினரின் ஆலோசனைகளைப் பின்பற்றி நோய் வரும் முன்னர் காக்கும் பணிக்கும் ஒத்துழைப்பு தரவேண்டும்” எனக் கோரியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.