சுமுக நிலைமை வருவதற்கு முன்னர் தேர்தல் அறிவித்தால் உடனடியாக வழக்கு! – அடிப்படை உரிமை மீறல் மனு உயர்நீதிமன்றில் தாக்கலாகும்இலங்கையில் கொரோனாத் தொற்றுப் பரவல் முற்றாக நீங்குவதற்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை சுயாதீன தேர்தல் ஆணையமோ அல்லது ஜனாதிபதியோ விடுத்தால் அதற்கு எதிராக உடனடியாக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்து அந்த முயற்சியை சட்ட ரீதியாகத் தடுப்பதற்கான முழு ஆயத்தத்தில் கொழும்பில் சிரேஷ்ட சட்ட வட்டாரங்கள் இருக்கின்றன என மிக நம்பகரமாக அறியவந்தது.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் ஆபத்து முற்றாக நீங்குவதற்கு முன்னர் தனது அரசியல் இலக்கை எட்டுவதற்காக அவசரப்பட்டுப் பொதுத் தேர்தலை நடத்தி முடிப்பதற்கு ஆட்சித் தலைமை தயாராக இருக்கின்றது எனக் கூறப்படுகின்றது.

அப்படி முயற்சி எடுக்கப்பட்டால் அதற்கு எதிராக நாட்டின் மூத்த வைத்திய நிபுணர்கள் மற்றும் மருத்துவத்துறையில் துறை தோய்ந்த கலாநிதிகளின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்குத் தாக்கல் செய்து அந்த முயற்சியை முறியடிப்பதற்கான ஆயத்த நிலையில் சட்ட வட்டாரங்கள் சில தயாராக இருக்கின்றன.

இதற்கான மனுவுக்குரிய நகல் வடிவங்கள்கூட சட்டத்துறையினால் இறுதி செய்யப்பட்டு விட்டன என்றும், பொதுத் தேர்தல் திகதி அறிவிப்பு விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பை எதிர்பார்த்து அந்த வட்டாரங்கள் காத்திருக்கின்றன என்றும் கூறப்பட்டது.

இந்த வழக்குகளில் மனுதாரர்களாகப் பெயர் குறிப்பிடப்படவிருக்கும் மருத்துவ நிபுணர்கள், விசேட வைத்தியர்கள் ஆகியோருக்கும் சட்ட நிபுணர்களுக்கும் இடையிலான விரிவான காணொளி உரையாடல் ஆலோசனை, கருத்துப் பரிமாற்றம் யாவும் சுமுகமாக நடந்து முடிந்திருக்கின்றன என்றும் கூறப்படுகின்றது.

பொதுத் தேர்தலை மே 23ஆம் அல்லது மே 30ஆம் திகதி நடத்துவதற்கு அரசுத் தரப்பால் முயற்சி எடுக்கப்படலாம் என்று கருதப்படுகின்றது. அப்படி அத்திகதியில் நடத்துவதாயின், அதற்கு முன்னர், வேட்புமனுத் தாக்கல் செய்த தரப்புகளுக்கு மாவட்ட ரீதியாக வேட்பாளர் இலக்கங்கள் ஒதுக்கப்பட்டு, அதன்பின்னர் ஐந்து வாரங்கள் பிரசாரத்துக்கு இடமளிக்கப்பட வேண்டும்.

அப்படிக் கொடுப்பதாயின் மே 23இல் தேர்தல் நடத்துவதாயின் குறைந்தபட்சம் இன்று அல்லது நாளை – மே 30ஆம் திகதி தேர்தல் நடத்துவதாயின் குறைந்த பட்சம் எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு முன்னரும் தேர்தல் நடத்துவது பற்றிய அறிவிப்பை விடுக்க வேண்டியிருக்கும்.

கொரோனாத் தொற்று ஆபத்து நீங்குவதற்கு முன்னர் இந்தத் தேர்தல் அறிவிப்பு விடுக்கப்படுமானால் அது குறித்து நிபுணத்துவ ரீதியான ஆதாரங்களோடு வழக்குத் தொடுத்து, அந்த முயற்சிக்கு எதிராக தடை உத்தரவு வாங்கவும், இந்த விடயத்தை ஒட்டி எழக் கூடிய அரசமைப்புச் சிக்கலைத் தவிர்ப்பதற்காக, கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீளக் கூட்டும்படியான உத்தரவை ஜனாதிபதிக்கு வழங்குமாறு கோரும் ஒரு விண்ணப்பத்தையும் அந்த மனுவில் சேர்த்துக் கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது என அறியவந்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.