கே.கே.எஸ். தனிமைப்படுத்தல் நிலையம் பாதுகாப்பானதா??? – கொரோனா தொற்று இலகுவில் பரவ சாத்தியம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டு

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறையில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தின் பாதுகாப்புத் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுச் சந்தேகத்தில் அங்கு தடுத்து வைக்கப்படும் ஒருவரிலிருந்து இன்னொருவருக்கு கொரோனா பரவக்கூடிய வகையில், தனிமைப்படுத்தல் நிலையம் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் எவையும் மேற்கொள்ளப்படுவதில்லை என்றும், மருத்துவர்களும் அவர்களைச் சென்று பார்வையிடுவதில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சுவிஸ் மத போதகருடன் நெருங்கிப் பழகிய தாவடி வாசிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து மத போதகருடன் நெருங்கிப் பழகிய 20 பேர் காங்கேசன்துறை தனிமைப்படுத்தல் நிலையத்தில் 4 அறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 6 பேருக்கு கடந்த முதலாம் மற்றும் மூன்றாம் திகதிகளில் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. எஞ்சிய 14 பேருக்கும் இனங்காணப்படவில்லை. நேற்றுமுன்தினம் மேற்கொள்ளப்பட்ட இரண்டாம் கட்டச் சோதனையில் 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. நேற்று மேற்கொள்ளப்பட்ட மூன்றாம் கட்டச் சோதனையில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சுவிஸ் மத போதகருடன் கடந்த மாதம் 15ஆம் திகதியே அவர்கள் இறுதியாகத் தொடர்புபட்டிருந்தனர். சுமார் 29 – 30 நாட்கள் கழிந்த பின்னர் அவர்களுக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது பல்வேறு சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது.

தனிமைப்படுத்தல் மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்து கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 6 பேரிடமிருந்து எஞ்சியோருக்கு பரவியிருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

அவ்வாறு கொரோனா பரவுவதற்கான வாய்ப்புக்கள் தனிமைப்படுத்தல் மையத்தில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அறைகள் ஒவ்வொன்றிலும் கட்டில்கள் குறித்த இடைவெளியில் போடப்பட்டுள்ளன. 4 அறைகளிலும் ஒவ்வொரு அறைகளுக்கும் ஒரு குளியலறை, ஒரு மலசலகூடமே உண்டு. அந்த அறைகளில் உள்ள அனைவரும் அதனையே பயன்படுத்த வேண்டும்.

இதேவேளை, உணவு அருந்துவதற்குத் தனிமைப்படுத்தலுள்ளவர்கள் ஒரு பொது இடத்திலேயே அமர வேண்டிய நிலைமை காணப்படுகின்றது. அத்துடன் உணவுகளும் ஒரு பெட்டியில் ஒன்றாகப் போட்டே வழங்கப்படுகின்றன. இவை எல்லாம் கொரோனா தொற்று ஒருவருக்கு ஏற்பட்டாலும் ஏனையோருக்கு பரவக் கூடிய சூழல் இருப்பதையே எடுத்துக்காட்டுகின்றது.

மேலும், தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் சாதாரண மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதில்லை. அத்துடன் மருத்துவ ரீதியான கண்காணிப்பும் மேற்கொள்ளப்படுவதில்லை. மருத்துவர்களும் அவர்களைச் சென்று பார்வையிடுவதில்லை என்று கூறப்படுகின்றது.

தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கியிருந்த ஏனையோருக்கு கொரோனா தொற்று நீண்ட நாட்களின் பின்னர் கண்டறியப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி, “தனிமைப்படுத்தல் மையங்கள் இராணுவத்தினரதும் சுகாதார சேவைகள் பணியாளர்களது கண்காணிப்பிலும் இருக்கின்றன. அதனை அவர்கள் சரியான முறையில் பராமரிக்க வேண்டும். எவ்வாறு இந்தத் தொற்று ஏற்பட்டது என்றும் தெளிவாகக் கூறி விட முடியாது. சுவிஸ் மத போதகர் ஊடாக வந்ததா? அல்லது அங்கு தங்கியிருந்தவர்கள் ஊடாக வந்ததா என்பது பற்றி தெளிவாகக் கூற முடியாத நிலைமை காணப்படுகின்றது. கொரோனா தொற்றுள்ள ஒருவர், சந்தேகத்துக்கு இடமானவர்கள் இருக்கின்றபோது அவர்கள் ஒருவரோடு மற்றவர் குறிப்பிட்ட இடைவெளியைப் பேண வேண்டும். தனிமைப்படுத்தப்பட வேண்டும். அவர்கள் அனைவரையும் ஒன்று கூடுகின்ற சந்தர்ப்பங்களை இல்லாமல் செய்யவேண்டும்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.