யாழில் வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட இருவரும் முதியவர்கள்!

யாழ்ப்பாணம், பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிக்கப்பட்டவர்களில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாக நேற்று அடையாளம் காணப்பட்ட இருவரும் முதியவர்களான ஆணும் பெண்ணும் என போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

அரியாலையைச் சேர்ந்த 60 வயதுடைய ஆணுக்கும் 61 வயதுடைய பெண்ணுக்குமே கொரோனா வைரஸ் தொற்றுள்ளதாக பரிசோதனையின் மூலம் கண்டறியப்பட்டது.

இவர்கள் இருவரும் கடந்த மார்ச் மாதம் 15ஆம் திகதி அரியாலை தேவாலயத்தில் ஆராதனை நடத்திய சுவிஸ் போதகருடன் நெருங்கிப் பழகியவர்கள்.

இதனால் மார்ச் 22ஆம் திகதி பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு கண்காணிக்கப்பட்ட 20 பேரில் இவர்களும் உள்ளடங்குகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் நேற்று 23 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, பலாலிப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 2 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சந்தேகத்தின் அடிப்படையில் சேர்க்கப்பட்ட 4 பேர் பலாலி தனிமை படுத்தப்பட்ட நிலையத்தில் உள்ள 3 பேர், யாழ்ப்பாணம் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 7 பேர் நல்லூர் நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த 2 மற்றும் முழங்காலில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையத்தில் உள்ள 2 பேருக்கு பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதில் பலாலிப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் இதுவரை 17 பேருக்கு வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்