பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது சமூகக் கடமை- சத்தியலிங்கம்

பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் சமூகக் கடமை அனைவருக்கும் உள்ளது என வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

இதனை, அரசியல்வாதிகள் மட்டுமே செய்ய வேண்டியதில்லை எனவும் சமூகத்தின் மீது அக்கறையுள்ள ஒவ்வாரு பிரஜைக்கும் இந்த கடமையுள்ளதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நாட்டு நிலைமை தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த உலகையே ஆட்டங்காண வைத்துள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உலகமே தனது சுழற்சியை இழந்ததுபோல நிற்கிறது.

உலக வல்லரசுகளையே ஆட்டங்காண வைத்துள்ள இந்த நோயின் தாக்கத்தினால் எமது நாடும் பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் எமது நாட்டின் உன்னதமான சுகாதார சேவையுடன் இணைந்து ஏனைய அத்தியாவசிய சேவைகள் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதால் பாதிப்புக்கள் கட்டுப்பாட்டிற்குள் இருப்பது ஓரளவு ஆறுதல் தருகின்றது.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள நோய்நிலை (கொவிட்-19) காரணமாக எல்லோரும் பலவகையிலும் பாதிக்கப்பட்டிருந்தாலும் அன்றாட உழைப்பில் குடும்பத்தை வழிநடத்திய பல குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், ஆதரவற்ற முதியோர்கள், தொற்றா மற்றும் தொற்று நோய்களுக்காக நீண்டகால சிகிச்சை பெறுபவர்கள் என பலர் அன்றாட உணவு மற்றும் மருத்துவ தேவைகளுக்காக பல சிரமங்களை எதிர்கொள்கிறார்கள்.

அவர்களுடைய பிரச்சினைகளை இனங்கண்டு நடவடிக்கை எடுக்கவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருந்தாலும் எங்கள் அனைவருக்கும் அப்பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கான சமூகக்கடமை உள்ளதை யாரும் மறுக்கமுடியாது.

அந்தவகையில், சமூகப்பங்காளி என்றவகையில் நான் முடிந்தவரை என்னாலான பங்களிப்பை விசேட வேலைத் திட்டத்தினூடாக முன்னெடுத்துள்ளேன். குறிப்பாக இந்நோய்நிலையால் பாதிப்புற்று உணவுத்தேவை உடையவர்களுக்கு உலர் உணவு விநியோகம் செய்யும் செயற்பாட்டில் கடந்த இருவாரங்களிற்கு மேலாக ஈடுபட்டுள்ளேன்.

வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டு சமூக வலைத்தளங்களில் தங்கள் நேரத்தை செலவழிப்பதற்காக மற்றவர்களை வீணாக விமர்சிப்பவர்கள் ஒருபுறம் தங்களது கடமையை சிறப்புடன் செய்துகொண்டு இருந்தாலும் அவர்களை பொருட்படுத்தாது நாம் எமது பணியை சிறப்புற செய்வோம் என உறுதி கூறுகின்றோம்.

இதுவரை வவுனியா மாவட்டத்தில் வவுனியா பிரதேச செயலக பிரிவில் ஆயிரத்து 815 குடும்பங்களுக்கும் செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் 741 குடும்பங்களுக்கும், வவுனியா வடக்கில் 179 குடும்பங்களுமாக மொத்தமாக 2 ஆயிரத்து 735 குடும்பங்களுக்கு எனது உதவித்திட்டங்கள் சென்றடைந்துள்ளன.

இந்த மனித நேயப்பணிக்கு என்னுடைய தனிப்பட்ட பங்களிப்பிற்கு மேலாக பலர் உதவியிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவிக்கிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.