ஏப். 25 க்குப் பின் தேர்தல் திகதியை அறிவிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் – மஹிந்த அணி அதிரடி அறிவிப்பு

“ஏப்ரல் 25 ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தலுக்கான புதிய திகதியை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவிக்க வேண்டும். இல்லையேல் ஏப்ரல் 25 ஆம் திகதிக்குப் பின்னர் தேர்தலுக்கான புதிய திகதியை அறிவிக்க ஜனாதிபதிக்கு அரசமைப்பின் ஊடாக அதிகாரம் கிடைக்கின்றது. இதன்போது ஜனாதிபதிக்குப் புதிய திகதி ஒன்றை அறிவிக்க முடியும்.”

– இவ்வாறு மஹிந்த அணியின் பங்காளிக் கட்சியான புதிய ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாரிய பிரச்சினை  ஏற்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்துவதற்கு அரசு அவசரம் காட்டவில்லை. எனினும், ஏப்ரல் 25ஆம் திகதி தேர்தல் நடத்துவதற்கு முன்னர் திகதி குறிப்பிடப்பட்டது. ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் தேர்தலை ஒத்திவைப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு எதிராக அரச தரப்பு நீதிமன்றத்தை நாடவில்லை. தேர்தலுக்கான புதிய திகதியைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு ஜனாதிபதி வழங்கியுள்ளார். எனவே, அவர் ஏப்ரல் 25 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலுக்கான புதிய திகதியை அறிவிக்க வேண்டும். இல்லையேல் ஏப்ரல் 25ஆம் திகதிக்குப் பின்னர் தேர்தலுக்கான புதிய திகதியை அறிவிக்க ஜனாதிபதிக்கு அரசமைப்பின் ஊடாகஅதிகாரம் கிடைக்கின்றது. இதன்போது ஜனாதிபதிக்குப் புதிய திகதி ஒன்றை அறிவிக்க முடியும். எதிரணியினர் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் பொய் வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். நாட்டின் அரசமைப்பு என்ன சொல்கின்றது என்பதை அவர்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.