வவுனியா உக்குளாங்குளத்தில் வீட்டிற்குள் இறங்கிய திருடனை மடக்கிப் பிடித்த இளைஞர்கள்!

வவுனியாநிருபர்

வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் வீட்டின் கூரையை கழற்றி வீட்டுக்குள் இறங்கிய திருடனை இளைஞர்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இச்சம்பவமானது இன்று அதிகாலை 3.30மணியளவில் உக்குளாங்குளம் சிவன்கோயில் சந்தியில் உள்ள வவுனியா பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் சமுர்த்தி அலுவலரின் வீட்டில்  இடம்பெற்றது.
வீட்டில் இருந்தவர்கள் உறங்கிக்கொண்டு
இருந்த போது,  வீட்டு வளவுக்குள் நுழைந்த திருடன்  குறித்த வீட்டில் உள்ள மரம் ஒன்றின் கூரை மேல் ஏறி வீட்டின் கூரையை கழட்டி  அதன் வழியாக வீட்டுக்குள் இறங்கியுள்ளான்.
இதனை அவதானித்த குறித்த வீட்டின் உரிமையாளர் கூச்சலிட்டும், தொலைபேசி மூலமாகவும் அப்பகுதி இளைஞர்களை உதவிக்கு அழைத்துள்ளார்.
விரைந்து செயல்பட்ட இளைஞர்கள் திருடனை மடக்கிப் பிடித்து  மரத்தில் கட்டிவைத்துடன், உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த பண்டாரிக்குளம் பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான பொலிசார்,  வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த வவுனியா பொலிஸார் திருடனை கைது செய்து  பொலிஸ்நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர்.
மேலும் கைது செய்யப்படட சந்தேக நபரை  நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கையை   வவுனியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்