நாடாளுமன்றத்தை உடன் கூட்டுங்கள்!! – கோட்டாவுக்கு அநுர கடிதம்  

முடியுமான அளவு விரைவாக நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கும் அதேசமயம் அவசியப்பட்டால் அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் மாநாட்டைக் கூட்டி ஓர் இணக்கமான முடிவை எட்டுவதற்கும் தாங்கள் முன்வர வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் இன்று உருவாகியிருக்கும் நெருக்கடியான நிலைமைகள் தொடர்பாகக் கலந்துரையாடுவதற்கு தங்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தைத் பெற்றுத் தருமாறும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் கேட்டுள்ளார்.

அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று  பரவியுள்ள நிலையில் முழு நாடுமே பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இன்னமும் மக்களால் சுதந்திரமாக நடமாட முடியாதுள்ளது. வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலையில் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இவ்வாறான நிலையில் ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் கலக்க முடியாத சூழ்நிலை அரசியல் கட்சிகளிடமும் மக்களிடமும்  காணப்படுகின்றது.

எனவே, இது குறித்து நாங்கள் விரிவாக ஆராய்ந்து அடுத்து எவ்வாறான நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் கலந்துரையாட விரும்புகின்றோம். நாடாளுமன்றத்தை அவசரமாகக் கூட்டுமாறு சிலர் வேண்டுகோள் விடுக்கின்றனர். அவர்களோடு நாங்களும் உடன்படுகின்றோம்.

முடியுமான அளவு விரைவாக நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கும் அதேசமயம் அவசியப்பட்டால் அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் மாநாட்டைக் கூட்டி ஓர் இணக்கமான முடிவை எட்டுவதற்கும் தாங்கள் முன்வர வேண்டும். இது குறித்தெல்லாம் உங்களுடன் கலந்துரையாட விரும்புகின்றோம். இதற்கு உரிய நேரத்தை உடனடியாக எமக்கு அறியத் தருமாறு தங்களிடம் கேட்டுக் கொள்கின்றோம்” – என்றுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.