அபாய கட்டத்தை கடந்தது இலங்கை – சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு

கொரோனா வைரஸால் ஏற்பட்ட அபாய காலத்தை இலங்கை கடந்துள்ளது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இருப்பினும் சமூக பரவலுக்கான நிலையை அடையவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

நேற்றும் கொரோனா தொற்று தொடர்பில் 500 பேரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோதிலும் எவருக்கும் தொற்று ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.

கொரோனாவைக் கட்டுப்படுத்தப்படுவதற்காக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பல்வேறு நடவடிக்கைகள் காரணமாகவே குறித்த அபாய நிலைமை தவிர்க்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொரோனா அபாயத்தால் முடக்கப்பட்டுள்ள பகுதிகளை மீண்டும் விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது யோசனை முன்வைக்கப்பட்டது என்றும், முதலில் மாகாண ரீதியில் சுகாதாரப் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு கட்டம் கட்டமாக சமூகத்தை விடுவிப்பது குறித்து இதன்போது  ஆராயப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி இறுதி முடிவை எடுப்பார் என்று குறிப்பிட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர், மீண்டும் விடுவிக்கப்படும் சந்தர்ப்பத்திலும் தொடர்ந்தும் மக்கள் சமூக இடைவெளியைப் பேண வேண்டிய நிலை உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.