தமிழர்கள் உடனடியாக தற்சார்பு பொருளாதாரத்தை நோக்கி நகரவேண்டும். -சுரேந்திரன் கோரிக்கை.-

கொரோனா அச்சம் காரணமாக தொடரும் ஊரடங்கு சட்டத்தினால் நாடு பாரிய பொருளாதார நெருக்கடிகளை சந்தித்துவரும் நிலையில் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் தமது தொழில்களை இழந்து பாரிய பொருளாதார மற்றும்
வாழ்வாதார நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.

எமது மக்களின் வாழ்வாதாரத்திற்காக எமது அரசியல் கட்சியாகிய தமிழீழ விடுதலை இயக்கம் தன்னாலான உதவிகளை வழங்கி வருகின்றது. குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் நமது செயலணி முழு வீச்சில் நிவாரணப்பணிகளை மேற்கொண்டு வருவதுடன் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட உடனேயே முதன் முதலாக எமது மக்கள் எதிர்கொள்ளப்போகின்ற பொருளாதார நெருக்கடிகளை எதிர்வுகூறி எமது மக்களுக்கான சரியான நிவாரணத்தை வழங்குமாறு ஜனாதிபதி உள்ளிட்ட அரச தரப்பிடமும் பொது நிறுவனங்களிடமும் கோரிக்கை விடுத்திருந்தோம். அதன் பயனாக பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் கொடையாளர்களும் மக்களுக்கு தமது உதவிகளை வழங்கிவருகின்றனர்.

வடக்கு கிழக்கை பொறுத்தவரை அரசாங்கத்தின் அறிவிப்புக்களும் நிவாரண நடவடிக்கைகளும் மந்தகதியிலேயே நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதனால் அரசசார்பற்ற நிறுவனங்களும் , தனிநபர்களும் ஊடகவியலாளர்களும் தம்மாலான உதவிகளை வழங்கி வருகின்றனர். தமிழ் மக்களுக்கு நெருக்கடி நிலை ஏற்படும்போது விரைந்து உதவும் புலம்பெயர் தமிழ் உறவுகளும் இந்த கொரோனா தாக்கத்தினால் முடங்கியுள்ளமையினால் முன்னரைப்போல அவர்களால் உடனடியாக எமது மக்களுக்கு பெருமெடுப்பில் உதவ முடியவில்லை. இருந்தும் சிலர் தம்மால் இயன்ற உதவிகளை செய்துவருகின்றனர்.

இந்த நிவாரண உதவித்திட்டங்களை எமது மக்களுக்கு எத்தனை நாட்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியும் என்பதும் வழங்கப்படுகின்ற பொருட்கள் எமது மக்களுக்கு போதுமானதாக உள்ளதா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

ஊரடங்குச்சட்டம் தொடரும் பட்சத்தில் எமது மக்கள் வெறுமனே உதவிகளை மட்டும் நம்பியிருக்காமல் உள்ளூர் உற்பத்திகளை மேம்படுத்த முன்வரவேண்டும்.

ஏற்கனவே கொரோனா பீதி ஒருபுறம், ஊரடங்கு சட்டம் மறுபுறமென இருமுனை தாக்கத்திற்குள்ளாகியுள்ள எமது மக்கள் அடுத்துவரும் வாரங்களில் வறட்சிக்கும் முகம்கொடுக்க வேண்டியுள்ளது.

இந்த மும்முனை தாக்கத்திலிருந்து விடுபட்டு எமது வாழ்வாதாரத்தையும் உயிராகாரத்தையும் உறுதிசெய்துகொள்வதற்காக நமது தேவைகளை பூர்த்திசெய்யத்தக்கவாறு வறட்சிக்காலத்தில் தூறல் பாசனம் உள்ளிட்ட குறைந்த நீர்ப்பாசனம் மூலமாக பயிரிடக்கூடய பயிர்களையும் தற்போதைய காலத்திற்கு தேவையான உற்பத்திகளையும் உற்பத்தி செய்து தன்னிறைவை அடைவதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்கவேண்டும்.

விவசாயப் பொருளாதாரத்தை முதன்மையாக கொண்ட நாம் பல உற்பத்திகளுக்கு இந்தியா , பாக்கிஸ்த்தான் போன்ற நாடுகளையே நம்பியிருக்கின்ற நிலையில் கொரோனா பீதி தொடருமானால் இறக்குமதிகள் முழுமையாக பாதிப்படையும் சாத்தியங்களை கருத்திற்கொண்டு எமது உற்பத்திகளை பெருக்கி நமது தேவைகளை நாமே பூர்த்தி செய்வதற்கு மக்களை ஊக்கப்படுத்தி விவசாய அபிரித்திக்கு தேவையான நிபுணத்துவ உதவி உள்ளிட்ட உதவிகளையும் வழிகாட்டல்களையும் வழங்க நாம் தயாராக இருப்பதோடு உள்ளூர் உற்பத்திகளுக்கு தேவையான உதவிகளை காலத்தின் தேவையறிந்து செயற்படுத்தவும் உறுதிபூண்டுள்ளோம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.