5 ஆயிரம் கொடுப்பனவு வழங்கும் சேவையில் கிராம உத்தியோகத்தர்கள் மீண்டும் இணைவு…

5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்கும் செயற்பாட்டை மீள ஆரம்பிப்பதற்கு இலங்கை கிராம சேவையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியின் பிரதிநிதிகளுடன் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்குவதற்காக இன்று மீண்டும் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன.

எவ்வாறாயினும், கிராம உத்தியோகத்தர்களும் சில தொழிற்சங்கங்களைச் சேர்ந்த சமுர்த்தி உத்தியோகத்தர்களும் இந்த நடவடிக்கையிலிருந்து இன்று விலகியிருந்தனர்.

சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள், உள்ளூராட்சி வட்டார பிரதிநிதிகள் ஊடாக நாட்டின் சில பகுதிகளில் இன்று விண்ணப்பங்களை விநியோகித்தனர்.

சில பகுதிகளில் மக்களுக்கு விண்ணப்பங்கள் கிடைக்கவில்லை.

வாழ்வாதாரத்தை இழந்த மக்களைத் தெரிவுசெய்து 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்கும் திட்டம் கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி ஆரம்பமானது.

இந்தக் கொடுப்பனவை பெறுவதற்கு தகுதியானவர்களைத் தெரிவுசெய்வதற்காக வட்டார பிரதிநிதி, கிராம உத்தியோகத்தர் உள்ளிட்ட 5 அரச அதிகாரிகள் அடங்கிய குழுவொன்றைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ச சுற்றுநிரூபம் மூலம் அறிவித்தார்.

எனினும், இம்மாதம் 15ஆம் திகதி இந்த விடயம் தொடர்பில் மற்றுமொரு சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டது.

ஏற்கனவே தயாரிக்கப்பட்ட காத்திருப்புப் பட்டியலில் 19 இலட்சம் குடும்பங்கள் உள்ளன என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தநிலையில் மீண்டும் விண்ணப்பங்களைக் கோருவதன் மூலம் பட்டியல்களை மீளாய்வு செய்யுமாறு மற்றுமொரு சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டது.

இந்த பின்புலத்திலேயே 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் திட்டத்திலிருந்து கிராம உத்தியோகத்தர்கள் விலகினர்.

இதேவேளை, 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவுக்கான தெரிவு நடவடிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபை  உறுப்பினர்களை நீக்கி அரச உத்தியோகத்தர்களை மாத்திரம் ஈடுபடுத்துமாறு சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள் சங்கம் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

எனினும், அகில இலங்கை ஐக்கிய சமுர்த்தி அதிகாரிகள் சங்கம் மாறுபட்ட நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.