வடக்கில் எதிர்பார்த்தளவு கொரோனா தொற்றில்லை – சுகாதார அமைச்சர் தெரிவிப்பு…

“வடக்கில் கொரோனா நோய்த் தொற்று வீரியமாக இருக்கும் என்று நம்பினோம். நல்லவேளை அப்படி நடைபெறவில்லை. இங்கு தொற்று அதிகரித்தால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கும் பிரிவை ஆரம்பிக்கத் திட்டமிட்டிருந்தோம். தற்போது அவ்வாறான நிலைமை அங்கு காணப்படவில்லை.”

– இவ்வாறு சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

கொரோனா தொற்று நோயாளர்களுக்கு வடக்கில் சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகள் ஏதாவது ஆரம்பிக்கப்படவுள்ளதா என்று கேட்டதற்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“வடக்கில் முதலாவது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டபோது நாம் அச்சமடைந்தோம். மத ஆராதனைக் கூட்டத்தை நடத்திய சுவிஸ் மத போதகரிடமிருந்தே அவருக்குத் தொற்று ஏற்பட்டிருந்தது. இதனால் வடக்கில் பலருக்கும் கொரோனா தொற்று ஏற்படும் என்று எதிர்பார்த்தோம். அப்படி தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் அவர்களுக்கு சிகிச்சையளிக்க யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அல்லது வடக்கில் தனியான இடத்தை தயார் செய்யவேண்டும் என்று திட்டமிட்டோம். ஆனால், நாங்கள் நினைத்தவாறு வடக்கில் நோயாளர் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை.

வடக்கில் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்தே கொரோனா நோயாளர்கள் மேலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு சிலரைத் தவிர ஏனையோருக்கு தொற்றுக்குரிய அறிகுறிகள் தென்படவில்லை. அவர்கள் சுகதேகிகளாகவே இருக்கின்றனர்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்